ҽ

விவிலியம் வாசித்து ஆறுதல் அடைதல் விவிலியம் வாசித்து ஆறுதல் அடைதல்  (ANSA)

தடம் தந்த தகைமை - யாக்கோபின் வழிமரபினருக்காக போர்

யூதா தன் எதிரிகளோடு போர்கள் பல புரிந்து, அவர்களை நிலைகுலையச் செய்து அழித்தார். யாசேர் நகரையும் அதைச் சேர்ந்த ஊர்களையும் கைப்பற்றியபின் யூதேயா திரும்பினார்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

இஸ்ராயேலர்களின் பலிபீடம் மீண்டும் எழுப்பப்பட்டது என்றும், திருஉறைவிடம் முன்பு இருந்ததுபோல் அர்ப்பணிக்கப்பட்டது என்றும், சுற்றிலும் இருந்த வேற்றினத்தார் கேள்விப்பட்டு மிகவும் சினங்கொண்டனர்; எனவே தங்கள் நடுவெ வாழ்ந்த யாக்கோபின் வழிமரபினரை அழித்தொழிக்கத் திட்டமிட்டனர்; அவ்வாறே அவர்களைக் கொன்றொழிக்கத் தொடங்கினர்.

இதுமேயாவில் இருந்த அக்கிரபத்தேனில் ஏசாவின் மக்கள் இஸ்ரயேலரை முற்றுகையிட்டிருந்ததால், யூதா அவர்களைக் கடுமையாகத் தாக்கி வீழ்ச்சியுறச் செய்து கொள்ளைப் பொருள்களையும் எடுத்துவந்தார்; பிறகு அவர் அம்மோனியரைத் தாக்கச் சென்றபோது, வலிமைமிக்க படையையும் திரளான மக்களையும் அவர்களின் தலைவரான திமொத்தேயுவையும் கண்டார். அவர்களோடு போர்கள் பல புரிந்து, அவர்களை நிலைகுலையச் செய்து அழித்தார். யாசேர் நகரையும் அதைச் சேர்ந்த ஊர்களையும் கைப்பற்றியபின் யூதேயா திரும்பினார்.

தங்கள் நாட்டில் வாழ்ந்துவந்த இஸ்ரயேலரை அழிப்பதற்காகக் கிலயாதில் இருந்த பிற இனத்தார் அவர்களுக்கு எதிராக அணிதிரண்டனர். எனவே இஸ்ரயேலர் தாதமா கோட்டைக்குத் தப்பியோடினர். அவர்கள் யூதாவுக்கும் அவருடைய சகோதரர்களுக்கும் எழுதி அனுப்பிய மடல் வருமாறு: “எங்களைச் சுற்றியுள்ள பிற இனத்தார் எங்களை ஒழித்துவிட எங்களுக்கு எதிராகத் திரண்டுவந்துள்ளனர். அவர்கள் வந்து, நாங்கள் அடைக்கலம் புகுந்திருக்கும் இந்தக் கோட்டையைப் பிடிக்க முன்னேற்பாடு செய்து கொண்டிருக்கிறார்கள். திமொத்தேயு அவர்களின் படைத்தலைவன். எங்களுள் பலர் ஏற்கெனவே மடிந்துவிட்டதால் இப்போது நீர் வந்து அவர்களிடமிருந்து எங்களைக் காப்பாற்றும். தோபு நாட்டிலுள்ள நம் சகோதரர்கள் அனைவரையும் பகைவர்கள் கொன்றுவிட்டார்கள்; அவர்களின் மனைவி மக்களைச் சிறைப்படுத்தியதோடு உடமைகளையும் கொள்ளையடித்து விட்டார்கள்; ஏறக்குறைய ஆயிரம் பேரை அங்குக் கொலை செய்து விட்டார்கள்.”

யூதாவும் அவருடைய சகோதரர்களும் அம்மடலைப் படித்துக் கொண்டிருக்கும்போதே, கிழிந்த ஆடைகளோடு சில தூதர்கள் கலிலேயா நாட்டிலிருந்து இதுபோன்ற செய்தி ஒன்றைக் கொண்டுவந்தார்கள். யூதாவும் மக்களும் இச்செய்தியைக் கேட்டு, கடுந்துயருக்கும் பகைவர்களின் தாக்குதலுக்கும் உள்ளாகியிருந்த தங்கள் உறவின்முறையினருக்குத் தாங்கள் செய்யவேண்டியதைப் பற்றி முடிவுசெய்யப் பெரும் கூட்டமாகக் கூடினார்கள். யூதா தம் சகோதரரான சீமோனை நோக்கி, “நீர் வீரர்களைத் தேர்ந்துகொண்டு கலிலேயா நாட்டிலுள்ள உம் உறவின்முறையினரை விடுவிக்கப் புறப்படும். நானும் என் சகோதரனான யோனத்தானும் கிலயாதுக்குப் போவோம்” என்றார். யூதேயாவைக் காப்பதற்காகச் செக்கரியாவின் மகனான யோசேப்பையும் மக்கள் தலைவர்களுள் ஒருவரான அசரியாவையும் எஞ்சிய படையோடு விட்டுச்சென்றார்; “இம்மக்களுக்குப் பொறுப்பாய் இருங்கள்; நாங்கள் திரும்பிவரும்வரை பிற இனத்தாரோடு போர் செய்யாதீர்கள்” என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார். கலிலேயாவுக்குச் செல்வதற்காகச் சீமோனுக்கு மூவாயிரம் வீரர்களும், கிலயாதுக்குச் செல்வதற்காக யூதாவுக்கு எண்ணாயிரம் வீரர்களும் குறிக்கப்பட்டார்கள்.

சீமோன் கலிலேயாவுக்குச் சென்று பிற இனத்தாரோடு போர்கள் பல செய்து அவர்களை அழித்தார். கலிலேயாவிலும் அர்பத்தாவிலும் இருந்த யூதர்களை அவர்களுடைய மனைவி மக்களோடும் அவர்களுக்குச் சொந்தமான பொருள்கள் அனைத்தோடும் கூட்டிக்கொண்டு பெரும் மகிழ்ச்சியோடு யூதேயா நாட்டுக்கு வந்தார்.

யூதா மக்கபேயும் அவருடைய சகோதரனான யோனத்தானும் யோர்த்தான் ஆற்றைக் கடந்து பாலைநிலத்தில் மூன்று நாள் பயணம் செய்தார்கள்; அவர்கள் நபத்தேயரைச் சந்தித்தார்கள். நபத்தேயர் அவர்களை இனிதே வரவேற்றுக் கிலயாது நாட்டில் வாழ்ந்துவந்த யூதர்களுக்கு நேர்ந்த யாவற்றையும் தெரிவித்தார்கள்; “போஸ்ரா, போசோர், அலேமா, காஸ்போ, மாக்கேது, கர்னாயிம் என்னும் வலிமைமிக்க மாநகர்களில் யூதர்கள் பலர் சிறைவைக்கப்பட்டிருக்கின்றனர்; மற்றும் சிலர் கிலயாதின் பிற நகரங்களில் சிறைவைக்கப்பட்டிருக்கின்றனர்; பகைவர்கள் நாளையே அவர்களின் கோட்டைகளைத் தாக்கிக் கைப்பற்றி, மக்கள் எல்லாரையும் ஒரே நாளில் அழித்தொழிக்க ஏற்பாடு செய்துகொண்டிருக்கிறார்கள்” என்று சொன்னார்கள்.

ஆதலால், யூதாவும் அவருடைய படைவீரர்களும் உடனே திரும்பிப் பாலைநில வழியாய்ப் போஸ்ராவுக்குச் சென்று அதைக் கைப்பற்றினார்கள்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 December 2023, 15:24