ҽ

அருள்பணியாளர் பிரான்சிஸ்கோ பேட்டன். அருள்பணியாளர் பிரான்சிஸ்கோ பேட்டன்.  

பெத்லகேமில் அமைதி, செபத்தை வலியுறுத்தும் திருவருகைக்காலம்

இயேசு பிறந்த பெத்லகேமில் திருப்பயணிகள் ஒருவரும் இல்லை, மனிதர்கள் யாருமின்றி புனித தலங்கள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன

மெரினா ராஜ் - வத்திக்கான்

இயேசு பிறந்த பெத்லகேமில் போர் மற்றும் வன்முறையினால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களை நினைவுகூரும் விதமாக இவ்வாண்டு திருவருகைக்கால செயல்பாடுகள் அமைதி மற்றும் செபத்தை உள்ளடக்கியதாக இருக்கும் என்றும், காசா, இஸ்ரேல் மட்டுமின்றி மேற்குக் கரையிலும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது என்றும் கூறியுள்ளார் அருள்பணியாளர் பிரான்சிஸ்கோ பேட்டன்.

டிசம்பர் 2 சனிக்கிழமை திருவருகைக் காலத்தின் முன்தயாரிப்பிற்கான நாளை முன்னிட்டு புனித பூமியில் நடைபெற உள்ள திருவருகைக்காலத் தயாரிப்புக்கள் குறித்து SIR (Servizio Informazione Religiosa) எனப்படும் செய்திகளுக்கு பதிலளித்துள்ளார் புனித பூமியின் காவலரான, பிரான்சிஸ்கன் சபை அருள்பணியாளர் பிரான்சிஸ்கோ பேட்டன்.

இயேசு பிறந்த பெத்லகேமில் திருப்பயணிகள் ஒருவரும் இல்லை, மனிதர்கள் யாருமின்றி புனித தலங்கள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன என்று எடுத்துரைத்துள்ள அருள்பணியாளர் பேட்டன் அவர்கள், காசா மற்றும் மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் நடந்த போர் மற்றும் வன்முறைகளே இதற்குக் காரணம் என்றும் எடுத்துரைத்துள்ளார்.

பெத்லகேம் மூடப்பட்ட ஒரு நகரமாக, எருசலேமிலிருந்து பிரிக்கப்பட்ட நகரமாகக் காட்சியளிக்கின்றது என்றும், வரலாற்றில் இதுவரை நடந்திராத இச்செயல் பெத்லகேம்  போர் மற்றும் மோதல்களின் விளைவுகளை அனுபவித்து வருகிறது என்பதை முழு உலகிற்கும் நினைவூட்டுகின்றது என்றும் தெரிவித்துள்ளார் அருள்பணியாளர் பேட்டன்.

டிசம்பர் 3 ஞாயிற்றுக்கிழமை பெத்லகேம்  திருத்தலத்தில் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் மற்றும் ஆர்மேனிய தலைவர்களால் வரவேற்கப்பட்டு அவர்களோடு இணைந்து அருள்பணியாளர் பேட்டன் அவர்கள் திருப்பலி நிறைவேற்றி மதியம் எருசலேம் திரும்ப உள்ளதாகவும் செய்தியாளர்களுக்குத் தெரிவித்துள்ளார்.

பெத்லகேமுக்குள் நுழைவது என்பது இஸ்ரயேல் மக்கள் செங்கடலைக் கடந்த அனுபவத்தை நினைவூட்டுகின்றது என்றும், மக்களுக்கு விடுதலையின் ஒளியைக் கொடுக்கும் அறிகுறிகளின் வரிசையில் ஒரு சுவரைக் கடந்து செல்வது என்பது தற்போதைய போர்ச்சூழ்நிலையில் நம்பிக்கையின் வலுவான அடையாளமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 December 2023, 11:51