ҽ

புகலிடம் தேடிச் செல்லும் சூடான் புலம்பெயர்ந்தோர் புகலிடம் தேடிச் செல்லும் சூடான் புலம்பெயர்ந்தோர்  

அகதிகளை கடினமான சூழலுக்குத் தள்ளும் காலநிலை மாற்றம்!

போதிய வளங்களும், ஆதரவும் இல்லாவிட்டால் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் மக்கள் மிகவும் துன்புறுவார்கள், அவ்வாறு நிகழாமல் தடுக்க தீர்வுகள் நம் கைகளிலேயே உள்ளன

ஜெர்சிலின் டிக்ரோஸ் வத்திக்கான்

உலகெங்கிலும் இடம்பெயர்ந்த 12  கோடி  மக்களில் நான்கில் மூன்று பகுதிக்கு அதிகமானவர்கள் காலநிலை மாற்றத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட  நாடுகளில் வாழ்கிறார்கள் என்பதை விளக்கி ஐக்கிய நாடுகளின் அகதிகள் அமைப்பு COP29மாநாட்டில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஐ.நா.வின் அகதிகள் அமைப்பு வெளியிட்டுள்ள காலநிலை மாற்றம் குறித்த இந்த அறிக்கை,13 நிபுணத்துவம் பெற்ற  அமைப்புகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், அகதிகள் தலைமையிலான குழுக்கள் ஆகியோருடன் இணைந்து தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலநிலை மாற்றம் தொடர்புடைய கருப்பொருள்கள் மற்றும் அவற்றை எதிர்கொள்வதற்கான உடனடி முயற்சிகளுடன் அஜர்பைஜானின் பாகுவில் இடம்பெற்றுவரும் ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றத்திற்கான COP29 மாநாட்டில், தீவிர வறட்சி, வெள்ளம், சூறாவளி போன்ற காலநிலை மாற்றத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள    அகதிகள் மற்றும் இடம்பெயர்ந்தவர்கள் காலநிலை மாற்றத்தின் கடினமான  விளைவுகளை எவ்வாறு தாங்குகிறார்கள் என்பது பற்றி விவாதிக்கப்பட்டது.

காலநிலை மாற்றம்  குறித்து வெளியிடப்பட்டுள்ள  அறிக்கை,  மோதல்கள்  நடைபெறும் இடங்களில் உள்ள மக்களை  காலநிலை மாற்றம் எவ்வாறு தாக்குகிறது என்றும், ஏற்கனவே ஆபத்தில் உள்ள மக்களை இன்னும் கடினமான சூழ்நிலைகளுக்கு தள்ளுகிறது என்றும் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, காலநிலை மாற்றம் குறித்த அறிக்கை  எத்தியோப்பியா, ஹெய்ட்டி, மியான்மர், சோமாலியா, சூடான் மற்றும் சிரியா நாடுகளையும் சுட்டிக்காட்டியுள்ளது.

தப்பிக்க இயலாத காலநிலை மாற்றம், மோதல்கள் மற்றும் இடம்பெயர்வில் முன்னிலையில் இருப்பவை என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள  இந்த அறிக்கை தீவிர காலநிலை தொடர்பான பாதிப்புகளை எதிர்கொள்ளும் நாடுகளின் எண்ணிக்கை 3 இலிருந்து 65 ஆக உயரும் என்று தெரிவித்துள்ளது.

உலகெங்கிலும் மோதல்கள் மற்றும் இடம்பெயர்வினால் மிகவும் பாதிக்கப்படுகின்ற மக்களுக்கு காலநிலை மாற்றம் என்பது அவர்களின் வாழ்க்கையை பாதிக்கக்கூடிய  ஒன்றாகும் என்று அகதிகளுக்கான ஐ .நா வின் உயர் ஆணையர் Filippo Grandi  கூறியுள்ளார்.

போர்கள் மற்றும் வன்முறையின் பிடியில் உள்ள மக்களுக்கு உதவுவதற்கான முயற்சிகள் அதிகரிக்க வேண்டும் என்று காலநிலை மாற்றம் குறித்த அறிக்கை தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு மிகவும் தேவைப்படும்  பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான உதவியை வழங்க அதிக நிதி மற்றும் தளவாட ஆதரவு தேவைப்படும் என்று Grandi தெரிவித்துள்ளார்.

மேலும், போதிய வளங்களும் ஆதரவும்  இல்லாவிட்டால் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் மக்கள் மிகவும் துன்புறுவார்கள் என்றும் அவை நிகழாமல் தடுக்க தீர்வுகள் நம் கைகளிலேயே உள்ளன என்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள உடனடி நடவடிக்கை தேவை என்றும் கூறியுள்ளார் அகதிகளுக்கான ஐ.நா.வின் உயர் ஆணையர் Filippo Grandi.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 November 2024, 14:56