ҽ

காலநிலை மாற்றத்தால் வறண்ட பூமி காலநிலை மாற்றத்தால் வறண்ட பூமி   (AFP or licensors)

Christian Aid அமைப்பின் காலநிலை மாற்றத்திற்கான நிதியறிக்கை

காலநிலை மாற்றத்தால் மிகவும் பாதிக்கப்படக்கூடிய 10 நாடுகளில் வாழும் மக்கள் காலநிலை மாற்றத்திற்கான நிதியிலிருந்து ஆண்டுக்கு 1 டாலருக்கும் குறைவாகவே பெறுகிறார்கள்

ஜெர்சிலின் டிக்ரோஸ் வத்திக்கான்

காலநிலை மாற்றத்தால்  மிகவும் பாதிக்கப்படக்கூடிய 10 நாடுகளில் வாழும் மக்கள் காலநிலை மாற்றத்திற்கான நிதியிலிருந்து  ஆண்டுக்கு 1 டாலருக்கும் குறைவாகவே பெறுகிறார்கள் என்று Christian Aid  என்னும் கிறிஸ்தவ பிறரன்பு அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

சுற்றுச்சூழல் தொடர்புடையவைகளில் நிதி பற்றாக்குறை ஏற்படும்போது அதனை ஈடுசெய்ய தனியார் பங்களிப்புகளை நம்பியிருக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்று அசர்பைஜானின் பாகுவில் நடைபெற்றுவரும்  COP29 மாநாட்டில் இந்த பிறரன்பு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை உலகத் தலைவர்களை எச்சரித்துள்ளது.

2000 மற்றும் 2019க்கு இடையில் காலநிலை மாற்றத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட பத்து நாடுகள் காலநிலை மாற்ற நிதியிலிருந்து  2 விழுக்காட்டிற்கும்  குறைவாகவே பெற்றன என்றும், தற்போது காலநிலை மாற்றத்தால் மிகவும் பாதிக்கப்படக்கூடிய பத்து நாடுகளில் வாழும் 75 கோடி  மக்கள் வசதி படைத்த  நாடுகளிடமிருந்து, ஒருவருக்கு ஆண்டுக்கு சராசரியாக 1 டாலருக்கும் குறைவாகவே பெற்றுள்ளனர் என்றும் அறிக்கை கூறுகிறது.

நிதிநிலையைப் பொறுத்தவரை நம்பகத்தன்மையை கட்டியெழுப்ப ஒரு புதிய அணுகுமுறைத் தேவை என்றும் கிறிஸ்தவ பிறரன்பு அமைப்பு தெரிவித்துள்ளது.  

2000 மற்றும் 2019க்கு இடையில் காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பத்து நாடுகள் உலக மக்கள்தொகையில் 9  விழுக்காடாக இருந்தாலும், காலநிலை   மாற்றத்திற்கான  நிதியில்  2 விழுக்காட்டிற்கும் குறைவான 2300 கோடி டாலர்களை பெற்றுள்ளன என்றும் அறிக்கை கூறுயுள்ளது.

வசதி படைத்த நாடுகள் காலநிலை மாற்றத்திற்கான தங்களின் நிதிப் பங்களிப்பை   செலுத்துமாறும், வளரும் நாடுகள் தங்கள் நாடுகளின் மாசுபாட்டை ஏற்படுத்தும் நிறுவனங்கள் மீது வரி விதிப்பதன் வழியாக காலநிலை மாற்றத்திற்கான நிதியை செலுத்துமாறும் Christian Aid  அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

காலநிலை மாற்றம் தொடர்பான நிதிநிலையில் தங்களின் குறைவான பங்களிப்பை வழங்கி வரும் ஏழை மற்றும் மிகவும் பாதிப்புக்கு ஆளாகக்கூடிய மக்களை இந்த காலநிலை மாற்றம் மிகவும் பாதிக்கிறது என்றும், இவர்கள் காலநிலை தொடர்பான சுமைகளை மாற்றியமைக்கும் திறன் படைத்தவர்களாய் இல்லாவிடினும், அவற்றை தாங்கக்கூடியவர்களாய் இருக்கிறார்கள் என்றும் Christian Aid அமைப்பின் COP29 ஒருங்கமைப்பாளர் Mariana Paoli  தெரிவித்துள்ளார்.

இலாபக் கணிப்பை அடிப்படையாகக் கொண்ட தனியார் நிதி, ஏழை மற்றும் காலநிலை மாற்றத்தால் பெரிதும்  பாதிக்கப்படக்கூடிய சமூகங்களை முழுமையாக சென்றடைவதில்லை என்றும்,  வெறும் 0.5 விழுக்காட்டு  நிதி மட்டுமே  மக்களை சென்றடைகிறது, இது  கடலில் ஒரு துளி போன்றது என்றும் அறிக்கை தெரிவித்துள்ளது.

காலநிலை மாற்றத்திற்கான பொருளாதாரத் தேவையின்  அளவை நிறைவு செய்யவும், கடன் நெருக்கடியை அதிகரிக்காமல் இருக்கவும், மானியங்கள் வழி  பொதுமக்களுக்கு அதிக உதவி தேவை என்றும் கூறுயுள்ளது கிறிஸ்தவ பிறரன்பு அமைப்பின் அறிக்கை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 November 2024, 14:38