ҽ

யூத-கிறிஸ்தவ கலந்துரையாடல் கூட்டம் யூத-கிறிஸ்தவ கலந்துரையாடல் கூட்டம் 

பத்து கட்டளைகள் பற்றிய யூத-கிறிஸ்தவ கலந்துரையாடல்

இரு மதத்தினருக்கும் இடையே பொதுவாக இருக்கும் மதிப்பீடுகளை ஆழமாக புரிந்துகொள்வதற்கு உதவும் வகையில் யூத-கிறிஸ்தவ கலந்துரையாடல் உரோமில் இடம்பெற்றது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

இறைவன் வழங்கிய பத்து கட்டளைகள் பற்றிய யூத மற்றும் கிறிஸ்தவ கண்ணோட்டங்கள் குறித்த கருத்தரங்கு அண்மையில் உரோம் நகரின் திருச்சிலுவை பாப்பிறை பல்கலைக் கழகத்தில் இடம்பெற்றது.

இரு மதத்தினருக்கும் இடையே பொதுவாக இருக்கும் மதிப்பீடுகளை ஆழமாக புரிந்துகொள்வதற்கு உதவும் வகையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடல், ‘ஒரு வெளிப்பாடும் இரண்டு பாரம்பரியங்களும்: பத்துகட்டளைகளும் அதன் யூத மற்றும் கிறிஸ்தவ பொருள்விளக்கங்களும்’ என்ற தலைப்பில் இருந்தது.

உரோம் நகரில் உள்ள திருச்சிலுவை பாப்பிறை பல்கலைக்கழகமும், அர்ஜெண்டினாவில் உள்ள புவனெஸ் அய்ரஸ் ஈசாக் அபர்பானெல் பல்கலைக்கழக நிறுவனமும் இணைந்து உரோம் நகரில் இந்த கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்திருந்தன.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்விரு மதங்களும் தங்களுக்குப் பொதுவானவைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்ற திருத்தந்தையின் விருப்பத்தின்பேரில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக உரைத்த ஈசாக் அபர்பானெல் பல்கலைகழக நிறுவன முதல்வர், யூதமத தலைமைக்குரு Ariel Stofenmacher அவர்கள்,  யூதமும் கிறிஸ்தவமும் ஒரே இறைத்தந்தையைக் கொண்டு ஒருவருக்கொருவர் சகோதரர்களாக இருப்பதால் இந்த கலந்துரையாடல் பலன் தருவதாக உள்ளது என்றார்.

இந்த கலந்துரையாடலுக்கான ஏற்பாடுகளைக் கவனித்த திருச்சிலுவை பல்கலைக்கழக பேராசிரியர் Juan Carlos Ossandon அவர்கள்,  இந்த கலந்துரையாடல் நல்லதொரு அனுபவப் பாடமாக இருந்ததாகவும், நல்ல ஒத்துழைப்புச் சூழலில் இடம்பெற்ற இந்த சந்திப்பு இரு மதங்களுக்கு இடையேயான பிணைப்பை வெளிப்படுத்துவதாக இருந்ததாகவும் தெரிவித்தார்.

வரலாற்று ரீதியாக, மத ரீதியாக மற்றும் கலாச்சார ரீதியாக பத்துக்கட்டளைகளின் பின்னணி மற்றும் பொருள் விளக்கம் குறித்து வல்லுனர்களின் உரைகளும் இங்கு இடம்பெற்றன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 November 2024, 16:26