பிரச்சனைகளுக்கு தீர்வு காண, கலந்துரையாடல்கள் அவசியம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
இன்றைய உலகின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டுமெனில் கலந்துரையாடல்கள் மிக முக்கியத்துவம் நிறைந்தவை என பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது கூறினார் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின்.
சீனாவில் நற்செய்தி அறிவித்த 16ஆம் நூற்றாண்டு இயேசுசபை அருள்பணியாளர் மத்தேயோ ரிச்சி அவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டதாக உரோம் நகரின் கிரகோரியன் பாப்பிறைப் பல்கலைக் கழகத்தில் இடம்பெற்ற கருத்தரங்கில் உரையாற்றியபின் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தபோது இவ்வாறு கூறினார் கர்தினால் பரோலின்.
‘நட்புணர்வு, கலந்துரையாடல், அமைதி ஆகியவைகளின் மரபு’ என்ற தலைப்பில் இடபெற்ற இக்கருத்தரங்கையொட்டி பதிலளித்த திருப்பீடச் செயலர், ஒருவர் கிறிஸ்தவராக இருப்பதற்கும் உண்மையான சீனராக இருப்பதற்கும் எவ்வித முரண்பாடும் இல்லை என்பதை இயேசு சபை மறைப்பணி ரிச்சி தெளிவாகக் கூறியுள்ளார் என்று எடுத்துரைத்தார்.
நாம் ஒன்றிணைந்திருந்தால் மட்டுமே இன்றைய பிரச்சனைகளுக்கு தீர்வுகாண முடியும், இல்லையெனில் பிரச்சனைகளை மேலும் சீர்கேடடையவே உதவுவோம் என்ற கர்தினால் பரோலின், இன்றைய ஐரோப்பாவில் இடம்பெற்றுவரும், உள்நாட்டுப் பிரிவினைகள், மற்றும் நிலையற்ற தன்மைகள் குறித்த கவலையையும் வெளியிட்டார்.
விசுவாசத்தை பண்பாட்டுமயமாக்கியதிலும், மேற்கத்திய மற்றும் சீன கலாச்சாரத்திற்கு இடையில் பாலமாகச் செயல்பட்டதிலும் அருள்பணி ரிச்சி அவர்கள் காட்டிய வழிகள், இன்றும் சீனாவுடனான கலந்துரையாடலுக்கு மிகவும் உதவுபவைகளாக உள்ளன என மேலும் கூறினார் கர்தினால்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்