ҽ

தாய்லாந்தில் மீன்பிடித் தொழில் தாய்லாந்தில் மீன்பிடித் தொழில்  (AFP or licensors)

உலக மீன்வள தினத்திற்கான திருப்பீடச் செய்தி

அதிகாரத்திலிருப்போர், ஒரு சிலரின் நலனை மட்டும் கருத்தில் கொள்ளாமல் அனைத்து மனிதர்களின், குறிப்பாக, குடும்பங்களின் நலனை கருத்தில் கொண்டதாக சட்டங்களை இயற்றவேண்டும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

ஒவ்வோர் ஆண்டும் உலகில் சிறப்பிக்கப்படும் உலக மீன்வள நாள் என்பது நம் சகோதரியான நீருடன் உள்ள உறவையும், ஒருங்கிணைந்த மனிதகுல வளர்ச்சியையும் ஆழப்படுத்துவதாக உள்ளது என கூறியுள்ளார் கர்தினால் மைக்கல் செர்னி.

இம்மாதம் இருபத்தொன்றாம் தேதி சிறப்பிக்கப்படும் உலக மீன்வள தினத்தையொட்டி செவ்வாய்க்கிழமையன்று செய்தி ஒன்றை வெளியிட்ட, ஒருங்கிணைந்த மனித குல வளர்ச்சிக்கான திருப்பீடத்துறையின் தலைவர், கர்தினால் செர்னி அவர்கள், “திரளான உயிரினங்களைத் தண்ணீர் தோற்றுவிப்பதாக!” (தொ.நூ. 1:20) என்ற தொடக்க நூல் வரியை அதற்கு தலைப்பாக எடுத்துள்ளார்.

மீன்பிடித் தொழில் என்பது, துவக்க காலத்திலிருந்தே இருக்கின்றபோதிலும், தற்போதைய தீவிர பொருளாதார நடைமுறைகள், மீன்பிடித்தொழிலை நம்பியிருக்கும் பல ஆயிரக்கணக்கான மக்களின் வருங்காலத்தை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கிவருகின்றன என தன் செய்தியில் கூறும் கர்தினால் செர்னி அவர்கள், நவீன மீன்பிடித்தல் முறைகளும், தேவைக்கதிகமாக மீன்களை பிடித்தலும் நீண்டகால பொருளாதார பாதிப்புக்கும், சுற்றுச்சூழல் அழிவுக்கும் இட்டுச் செல்கின்றன என கவலையை வெளியிட்டுள்ளார்.     

பாராமுகம் என்பது உலகமயமாக்கப்பட்டுவருவதற்கு எதிராக உடன்பிறந்த உணர்வு என்னும் கலாச்சாரம் முன்வைக்கப்பட வேண்டும் என தன் செய்தியில் அழைப்புவிடுக்கும் கர்தினால், இன்றைய பழக்கமுறைகளால் சுற்றுச்சூழல் பெரும் அழிவுக்கு உள்ளாக்கப்படுவருவது குறித்து கிறிஸ்தவர்களாகிய நாம் மௌனம் காக்க முடியாது எனவும் அதில் தெரிவித்துள்ளார்.    

      ஒரு தொழிலாளியின் பாதுகாப்பையும் மாண்பையும் உறுதி செய்யும்வகையில் எந்த ஒரு தொழில்நுட்ப முன்னேற்றமும் இருக்க வேண்டும் என்பதையும், அதிகாரத்திலிருப்போர், ஒரு சிலரின் நலனை மட்டும் கருத்தில் கொள்ளாமல் அனைத்து மனிதர்களின், குறிப்பாக, சிறுபான்மையினர் மற்றும் குடும்பங்களின் நலனை கருத்தில் கொண்டதாக சட்டங்களை இயற்றவேண்டும் எனவும் தன் செய்தியில் அழைப்பு விடுத்துள்ளார் கர்தினால் செர்னி.  

நம்பிக்கையின் மனிதர்களாக நாம் ஒவ்வொருவரும் செபத்தின் மௌன சக்தியை உணர்ந்துகொண்டவர்களாக, நீதிக்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற அழைப்பையும் தன் செய்தியில் விடுத்துள்ளார்,    ஒருங்கிணைந்த மனித குல வளர்ச்சிக்கான திருப்பீடத் துறையின் தலைவர், கர்தினால் செர்னி.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 November 2024, 15:32