ҽ

தொழில்நுட்பம் என்பது ஒரு கொடை

கர்தினால் Mauro Gambetti : புனித பேதுரு பேராலயத்தை நம் அருகில் கொணரும் தொழில்நுட்ப வளர்ச்சி, கோடைக்கால இரவில் நட்சத்திரங்கள் நிறைந்த வானத்தை பார்ப்பதற்கு ஒப்பாகும்

ஜெர்சிலின் டிக்ரோஸ்  வத்திக்கான்

2025ஆம் ஆண்டு  யூபிலி  கொண்டாட்டங்களுக்கு திருஅவை தயாராகி  வரும் நிலையில், செயற்கை நுண்ணறிவு ஒரு மேம்படுத்தப்பட்ட அனுபவம் என்ற தலைப்பில் புனித பேதுரு பெருங்கோவிலை செயற்கை நுண்ணறிவுடன் மக்களுக்கு கொணரும் திட்டம் நவம்பர் 11, திங்களன்று  வெளியிடப்பட்டது.

புனித பேதுரு பேராலயத்திற்குள்ளான அதிவேகமான மெய்நிகர் சுற்றுலாக்கள் மற்றும் ஆழமான தொழில்நுட்ப கண்காட்சிகளையும் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கிய இந்த செயற்கை நுண்ணறிவு திட்டம் உள்ளடக்கியுள்ளது என்று கர்தினால் Mauro Gambetti  தெரிவித்தார்.

புனித பேதுரு பேராலயத்தின் இந்த தொழில்நுட்ப வளர்ச்சி, கோடைக்கால இரவில் நட்சத்திரங்கள் நிறைந்த வானத்தை பார்ப்பதற்கு ஒப்பாகும் என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் புனித பேதுரு பேராலயத்தின் தலைமைக்குருவும், வத்திக்கானுக்கான திருத்தந்தையின் பிரதிநிதியுமான கர்தினால் Mauro Gambetti.

தொழில்நுட்பத்தின் இந்த புதிய கண்டுபிடிப்புகள், சிறந்த காட்சிகளை காண்பதற்கு ஒரு தொலைநோக்கி போல செயல்படுகின்றன என்றும்  கர்தினால் கூறினார்.

வத்திக்கான் மற்றும் Microsoft இடையேயான ஒத்துழைப்பு, நம்பிக்கை மற்றும் பாரம்பரியத்தின் பணிகளில் தொழிநுட்பத்தை புதுமையாக பயன்படுத்துவதற்கானது என்றார் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவர் Brad Smith.

கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் இணைப்பதில் தொழில்நுட்பம் வகிக்கக்கூடிய தனித்துவமான பங்கினை பற்றியும் கூறிய Brad Smith அவர்கள், உரோம் நகருக்கு வரும் திருப்பயணிகளின் ஆன்மீக அனுபவத்தை இந்த செயற்கை நுண்ணறிவு அதிகரிக்கும் என்றும் கூறினார்.

புனித பேதுருவின் வாழ்க்கை, அவரது கொள்கை பற்றிய ஆழ்ந்த நுண்ணறிவை இந்த தொழில்நுட்பம் வழங்குகிறது மற்றும், வரலாற்றை உயிர்ப்பிக்கிறது என்றும் மேலும் எடுத்துரைத்தார்  Smith.

புனித பேதுரு பேராலயத்தில்  நேரடியாக பார்க்க முடியாத சில பகுதிகளை இந்த மெய்நிகர் அனுபவம் பார்க்க அனுமதிக்கும் என்றும், தொழில்நுட்ப கண்காட்சியின் வழியாக பேராலயத்தின் கீழே உள்ள பழங்காலக் கல்லறைகளையும், பல கலைப்படைப்புக்களையும், பேராலயத்தின் உயரமான கோபுரத்தையும் பார்க்க முடியும் என்று கூறினார் Microsoft நிறுவனத்  தலைவர்.

பேராலயத்தின் விவரங்களை படம்பிடிக்க அதிநவீன ட்ரோன், புகைப்படக் கருவிகள், மற்றும் laser scanning  தொழில் நுட்பத்தை பயன்படுத்தி புனிதபேதுரு பேராலயத்தின் மெய்நிகர் நகல் உருவாக்கப்பட்டது என்றும், அதனைத் தொடர்ந்து தரவுகள் அனைத்தையும் ஒன்றிணைக்க, மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு வழிமுறைகள் மேலும் உருவாக்கப்பட்டன என்றும் தெரிவித்தார் Smith.

தொழில்நுட்ப முயற்சியின் நோக்கம், வரும் தலைமுறையினர் புனித பேதுரு பேராலயத்தின் சிறப்புகளை அவர்கள் புரிந்துகொள்ளும் வடிவத்தில்  வழங்குவதே என்றும் கூறினார் Smith.

மேலும், நேரடியாக உரோமைக்கு செல்ல இயலாத உலகெங்கிலும் உள்ள மக்களுக்கும் கூட  இந்த தொழில்நுட்பம் உரோம் நகரின் ஆன்மீகம், கலாச்சாரம், வரலாறு ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் வழங்குகிறது என்றும்  Smith கூறினார். 

வத்திக்கான் போன்ற ஒரு தொன்மை குழுமத்திற்கும் (திருஅவைக்கும்)  ஒரு நவீன தொழில்நுட்ப நிறுவனத்திற்கும் இடையிலான  கூட்டுச் செயல்பாட்டை   எடுத்துரைத்த Smith அவர்கள், வேறுபாடுகளைக் கடந்து ஆழமான புரிதலுக்கு அழைப்பு விடுக்கும் இந்த கூட்டுச் செயல்பாட்டின் ஆற்றலை நம்புவதாகவும் தெரிவித்தார்.

நம்பிக்கையை முன்னெடுத்துச் செல்வதற்கும், கற்பனை செய்ய முடியாத வழிகளில் அதன் பொக்கிஷங்களை அணுகுவதற்கும் ஒரு வழிமுறையாக புதிய தொழில்நுட்பத்தை ஏற்படுத்துவதற்கான  திருப்பீடத்தின் விருப்பத்தையும் தெரிவித்தார் Microsoft நிறுவனத்  தலைவர் Smith.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 November 2024, 15:25