ҽ

புதன் மறைக்கல்வி உரை - தனிவரங்கள் மற்றும் பொதுநலனுக்கான தூயஆவியாரின் கொடைகள்

நவம்பர் 20 புதன்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு மணமகளின் பரிசுகள் – தனிவரங்கள் மற்றும் பொது நலனுக்கான தூய ஆவியாரின் கொடைகள் என்ற தலைப்பில் தனது மறைக்கல்வி உரைக் கருத்துக்களை எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

நவம்பர் 20 புதன்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு தூய ஆவியாரும் மணமகளும். நம் நம்பிக்கையாம் இயேசுவை நோக்கி இறைமக்களை வழிநடத்தும் தூயஆவியார்’ என்ற தலைப்பின் 14ஆம் பகுதியாக மணமகளின் பரிசுகள் – தனிவரங்கள் (அருள்கொடைகள்) மற்றும் பொதுநலனுக்கான தூய ஆவியாரின் கொடைகள் என்ற தலைப்பில் தனது மறைக்கல்வி உரைக் கருத்துக்களை எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

உலகின் பல பகுதிகளிலிருந்தும் திருத்தந்தையின் மறைக்கல்வி உரைக் கருத்துக்களுக்கு செவிசாய்க்க கூடியிருந்த ஆயிரக்கணக்கான திருப்பயணிகள் நடுவில் திறந்த காரில் வலம் வந்தார் திருத்தந்தை. சிலுவை அடையாளம் வரைந்து புதன் மறைக்கல்வி உரைக் கூட்டத்தைத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் துவக்கி வைக்க தூய ஆவியார் அருளும் கொடைகள் என்ற தலைப்பின் கீழ் உள்ள கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமடலில் உள்ள இறைவார்த்தைகள் பல்வேறு ஐரோப்பிய மொழிகளில் வாசித்தளிக்கப்பட்டன.

1 கொரிந்தியர் 12: 4 – 7, 11

அருள்கொடைகள் பலவகையுண்டு; ஆனால், தூய ஆவியார் ஒருவரே. திருத் தொண்டுகளும் பலவகையுண்டு; ஆனால், ஆண்டவர் ஒருவரே. செயல்பாடுகள் பலவகையுண்டு; ஆனால், கடவுள் ஒருவரே. அவரே எல்லாரிடமும் எல்லாவற்றையும் செயல்படுத்துபவர். பொது நன்மைக்காகவே தூய ஆவியாரின் செயல்பாடுகள் ஒவ்வொருவரிலும் வெளிப்படுகிறது. அந்த ஒரே ஆவியாரே இவற்றையெல்லாம் செயல்படுத்துகிறார்; அவரே தம் விருப்பம்போல் ஒவ்வொருவருக்கும் இவற்றைப் பகிர்ந்தளிக்கிறார்.

இறைவார்த்தைகள் வாசித்தளிக்கப்பட்டதைத்தொடர்ந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது தொடர் மறைக்கல்வி உரையினைத் திருப்பயணிகளுக்கு வழங்க ஆரம்பித்தார். திருத்தந்தையின் மறைக்கல்வி உரைக் கருத்துக்களுக்கு இப்போது நாம் செவிசாய்ப்போம்.

அன்பான சகோதர சகோதரிகளே, காலை வணக்கம்!

அருளடையாளங்கள், செபம், கடவுளின் தாயான அன்னை மரியின் முன்மாதிரியைப் பின்பற்றுதல் போன்றவற்றின் வழியாக தூய ஆவியின் செயல்களைப் பற்றி கடந்த மூன்று வாரமாக நாம் நமது மறைக்கல்வி உரையில் அறிந்துகொண்டோம். தூயஆவியார் அருளடையாளங்கள் மற்றும் பணிகள் வழியாக கடவுளின் மக்களைப் புனிதப்படுத்தி, வழிநடத்தி, நற்பண்புகளால் அலங்கரிக்கிறார். அதுமட்டுமன்றி, ஒவ்வொருவரையும் அவரவர் விருப்பப்படி அருள்கொடைகளாக நிரப்புகின்றார் என்று இரண்டாம் வத்திக்கான் சங்க  உரைகள் எடுத்துரைக்கின்றன.

எனவே, திருஅவையில் தூயஆவியார் செயல்படும் வழியான அருள்கொடைகள் அல்லது தனிவரங்கள் பற்றி இன்று நாம் காணலாம். முதலாவதாக தூய ஆவியார் அளிக்கும் தனிவரங்கள் பொது நன்மைக்காகக் கொடுக்கப்பட்ட கொடைகள். முதன்மையாகவும் இயல்பாகவும் தனிநபரின் தூய்மைத்தனத்திற்காக அல்ல, மாறாக நாம் வாழ்கின்ற சமூகத்தின் நன்மைக்காக பயன்படுத்தப்பட வேண்டும். கடவுளுடைய பல்வகை அருள்கொடைகளின் சீரிய பொறுப்பாளர்களாக பெற்றுக் கொண்ட அருள்கொடையைப் பயன்படுத்தி, ஒருவருக்கொருவர் பணிபுரிய வேண்டும்.

இரண்டாவதாக அருள்கொடைகள் ஒருவருக்கு அல்லது சிலருக்கு கொடுக்கப்பட்ட கொடை. அனைவருக்கும் ஒரே மாதிரியாக அல்ல மாறாக இரக்கம், இறையியல் பண்புகள், அருளடையாளங்கள் போன்றவற்றிலிருந்து வேறுபட்டு பொது நன்மைக்காகக் கொடுக்கப்படுகின்றது.

சிறப்பு வரங்களை ஒவ்வொரு நிலையிலுள்ள நம்பிக்கையாளர்களுக்கும் தூய ஆவியார் வழங்குகின்றார். இதன் வழியாக திருஅவையின் பணிகள் மற்றும் கடமைகளை ஏற்றுக்கொண்டு அதனைக் கட்டி எழுப்புவதற்கு அவர்களை தயார்படுத்துகின்றார். பொது நன்மைக்காகவே தூய ஆவியாரின் செயல்பாடுகள் ஒவ்வொருவரிலும் வெளிப்படுகிறது என்ற திருத்தூதர் பணிகளில் உள்ள இறைவார்த்தைகளுக்கு ஏற்ப அவர்களை வழிநடத்துகின்றார்.  

கிறிஸ்துவின் மணப்பெண்களை தனிவரங்கள் என்னும் ஆபரணங்கள் நகைகள் வழியாக மேலும் அழகுபடுத்துகின்றார் தூயஆவியார். அசாதாரணமானவைகளாக, எளிமையானவைகளாக, மிகவும் பொதுவானவைகளாக இருக்கும் இத்தகைய தனிவரங்கள் திருஅவையின் தேவைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதால், நன்றியுணர்வு மற்றும் அருளுடன் அவை பெறப்பட வேண்டும்.

பொது நிலையினர் மற்றும் பெண்களின் ஊக்குவிப்பு, தனிப்பட்ட நிறுவனங்கள் மற்றும் சமூகவியல் நிறுவனங்களின் உண்மைக்காக மட்டுமன்றி விவிலிய மற்றும் ஆன்மிக பரிமாணத்திலும் தனிவரங்கள் கண்டறிந்து புரிந்துகொள்ளப்பட வேண்டும். ஒவ்வொருவரும் அவரவர் பெற்றுள்ள தனிவரங்களைக் கண்டறிய வேண்டும். பொது நிலையினர் அருள்பணிக்கான கூடுதல் ஒத்துழைப்பாளர்கள் துணையாளர்கள் அல்ல மாறாக அவர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் பெற்றுள்ள தனிவரங்கள் மற்றும் கொடைகள் வழியாக திருஅவைப் பணிக்குப் பங்களிப்பவர்கள்.

தனிவரங்கள் அருள்கொடைகள் என்று கூறும்போது அவைகள் கண்களைக் கவரும் வகையிலோ அல்லது சிறப்பு கொடைகள் என்ற அளவிலோ தவறாகப் புரிந்து கொள்ளப்படக் கூடாது. சாதாரணமான அக்கொடைகள் தூய ஆவியால் ஈர்க்கப்பட்டு வாழ்வின் சூழல்களில் அன்பின் உருவமாக வடிவெடுக்கும்போது அசாதாரணமான மதிப்பினைப் பெறுகின்றன. இந்த விளக்கம் மிக முக்கியமானது ஏனெனில் பல கிறிஸ்தவர்கள், தனிவரங்களைப் பற்றி கேள்விப்பட்டு, சோகத்தையும் ஏமாற்றத்தையும் அனுபவிக்கிறார்கள், ஏனெனில் அவர்கள் தனிவரம் என்று எதுவும் இல்லை என்று எண்ணி, ஒதுக்கப்பட்டவர்களாகவோ அல்லது இரண்டாம் தர கிறிஸ்தவர்களாகவோத் தங்களை உணர்கிறார்கள்.

எல்லாவற்றையும்விடச் சிறந்த நெறி என்று பிறரன்புப் பணிகளை திருத்தூதர்கள் கூறுவதற்குக் காரணம், அவை நம்மை திருஅவையை, நாம் வாழ்கின்ற சமூகத்தை மேலும் அன்பு செய்ய வைக்கின்றன. நாம் பெற்றுள்ள அருள்கொடைகள் அல்லது தனிவரங்கள் சிறியதாக இருந்தாலும் அவை எல்லாருக்குமானது பொது நலனுக்கானது. பிறரன்புப் பணிகள் தனிவரங்களை பலுகச் செய்கின்றன. ஒருவரின் தனிவரம் பலரின் தனிவரங்களாக  மாறுகின்றது.

இவ்வாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது மறைக்கல்வி உரைக் கருத்துக்களை நிறைவு செய்ததும் கூடியிருந்த திருப்பயணிகள் அனைவரையும் வாழ்த்தினார்.

நவம்பர் 20 புதன்கிழமை சிறப்பிக்கப்படும் குழந்தைகள் மற்றும் இளையோரின்  உரிமைகளுக்கான உலக நாளை நினைவுகூர்ந்த திருத்தந்தை அவர்கள், வத்திக்கானில் வருகின்ற 2025ஆம் ஆண்டு பிப்ரவரி 3ஆம் நாள் “அவர்களை அன்பு செய்வோம்  பாதுகாப்போம்” என்ற தலைப்பில் உலகக் குழந்தைகள் நாளுக்கான கூட்டம் நடைபெற இருப்பதாகத் தெரிவித்தார்.

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள், கருத்துரையாளர்கள் பங்கேற்க இருக்கும் இக்கூட்டத்தில், பாதுகாப்பற்ற நிலையில் வாழ்கின்ற, சுரண்டப்படுகின்ற, வன்முறைகள் மற்றும் முறைகேடுகளால் பாதிக்கப்படுகின்ற குழந்தைகள், மற்றும் போர்களின் வியத்தகு விளைவுகளை அனுபவிக்கும் உரிமைகள் இழந்த இலட்சக் கணக்கான குழந்தைகளை மீட்பதற்கும் பாதுகாப்பதற்கும் புதிய வழிகளை அடையாளம் காண இக்கூட்டம் ஒரு வாய்ப்பாக இருக்கும் என்றும் எடுத்துரைத்தார்.

இந்நாளுக்காகத் தயார் செய்யும் குழந்தைகள் குழுக்களுக்கு தனது நன்றியினைத் தெரிவித்த திருத்தந்தை அவர்கள், அவர் இருந்த மேடையை நோக்கி ஒருவர் பின் ஒருவராக வந்த குழந்தைகள் அனைவரையும் ஆசீர்வதித்து வாழ்த்தினார்.

மேலும் யூபிலி 2025ஆம் ஆண்டில் சிறப்பிக்கப்படும் குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினர் நாளன்று (ஏப்ரல் 25 – 27) அருளாளர் கார்லோ அகுதீஸ் புனிதராக உயர்த்தப்பட உள்ளதாகவும், இளையோர் நாளன்று (ஜூலை 28 – ஆகஸ்ட் 3) அருளாளர் பியர் ஜோர்ஜோ பிரசாத்தி புனிதராக உயர்த்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

நவம்பர் 19 உக்ரைனில் போர் தொடங்கி 1000 நாள் முடிவுற்றதை நினைவுகூர்ந்த திருத்தந்தை அவர்கள், போர் ஏற்படுத்திய பேரழிவுகள், சோகத்தையும் மனித குலத்திற்கு அவமானத்தையும் ஏற்படுத்தியுள்ளன என்றும், துன்புறும் உக்ரைன் மக்களுக்கு ஆதரவாக நிற்றல், அமைதிக்காகப் போராடுதல், செபித்தல், பேச்சுவார்த்தை மேற்கொள்ளுதல் மற்றும் மோதலுக்கு வழிவகுக்கும் ஆயுதங்களை உருவாக்குதலை தடுத்தல் போன்றவற்றிற்காக தொடர்ந்து உழைக்கக் கேட்டுக்கொண்டார்.

நவம்பர் 18 அன்று உக்ரைன் பல்கலைக்கழக மாணவரிடமிருந்து  தனக்கு வந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தக் கருத்துக்களையும் திருப்பயணிகளிடம் எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், உக்ரைன் மக்களை நினைவுகூர்ந்து செபிக்க வலியுறுத்தும் போதெல்லாம் மக்கள் படும் துன்பங்களை மட்டுமல்ல மாறாக அவர்களது நம்பிக்கையின் சான்றுள்ள வாழ்வையும் எடுத்துரைத்து பேசுங்கள் என்று அம்மாணவர் கேட்டுக்கொண்டதாகவும் கூறினார்.

இத்துன்பங்கள் என்னும் தூரிகையின் வழியாக உயிர்த்த இயேசுவின் உருவத்தை  வரைவதாகவும் இதுன்பங்கள் வழியாக அதிகமாக அன்பு செய்யக் கற்றுக்கொண்டதாகவும் மாணவர் கூறியுள்ள கருத்துக்களை எடுத்துரைத்தார்.

​​​​ஆயிரம் நாட்கள் துன்பங்களை நினைவில் கொள்ளும்போது, ​​அன்பின் ஆயிரம் நாட்களையும் நினைவில் கொள்ளுங்கள், ஏனென்றால் அன்பு, நம்பிக்கை மற்றும் எதிர்நோக்கு மட்டுமே காயங்களுக்கு உண்மையான அர்த்தத்தைத் தருகிறது என்று மாணவர் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இளைஞர்கள், நோயாளிகள், முதியவர்கள் மற்றும் புதுமணத் தம்பதிகளை நினைவுகூர்ந் செபித்த திருத்தந்தை நவம்பர் 24 ஞாயிற்றுக்கிழமை பொதுக்காலத்தின் இறுதி வாரத்தில் சிறப்பிக்கப்பட இருக்கும் கிறிஸ்து அரசர் பெருவிழா பற்றி எடுத்துரைத்து, அன்பு மற்றும் அமைதியின் அரசைக் கட்டியெழுப்ப இறைவனின் உடனிருப்பை வாழ்வில் ஏற்று அங்கீகரித்து வாழ அழைப்புவிடுத்தார்.

நவம்பர் 21 வியாழனன்று அன்னை மரியா ஆலயத்தில் அர்ப்பணிக்கப்பட்ட விழாவைக் கொண்டாடும் வேளையில் அடைபட்ட வாழ்வு வாழும் துறவறத்தாருக்காக செபிக்க அழைப்புவிடுக்கும் pro orantibus நாளுக்காக செபிக்க வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், தங்களது செபவாழ்வு மற்றும் ஆன்மிக வாழ்வினால் திருஅவைச் சமூகத்திற்குப் பணியாற்றும் அத்துறவிகளின் வாழ்வு குறைவுபடாமல் செழித்தோங்க வாழ்த்தினார்.

இவ்வாறு தனது மறைக்கல்வி உரைக்கருத்துக்களையும் அதனைத் தொடர்ந்த செப விண்ணப்பங்களையும் நிறைவு செய்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூடியிருந்த மக்களுக்கு தன் அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 November 2024, 08:58