ҽ

இத்தாலிய தேசிய கத்தோலிக்க இளையோர் அமைப்புடன் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலிய தேசிய கத்தோலிக்க இளையோர் அமைப்புடன் திருத்தந்தை பிரான்சிஸ்  (Vatican Media)

கனவு காணும் திறன் படைத்த இளைஞர்கள் – திருத்தந்தை பிரான்சிஸ்

கல்வியறிவு, போதைப்பொருள் ஆதிக்கம் போன்ற பிரச்சனைகளால் சமூக ரீதியாக பாதிக்கப்பட்டவர்கள், கனவு காண முடியாதவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள் என அனைவருக்காகவும் குரல் கொடுப்பவர்களாக இருக்கவேண்டும்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

இளைஞர்கள் கனவு காணும் திறன் படைத்தவர்களாக இருக்க வேண்டும் என்றும், கனவு காணும் திறனை இழந்தவர்கள் வயதானவர்களாக அல்ல, மாறாக வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெற்றவர்களாக மாறுகின்றார்கள் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நவம்பர் 16 சனிக்கிழமை வத்திக்கானின் கொன்சிஸ்தோரோ அறையில் இத்தாலிய தேசிய இளையோர் மன்ற உறுப்பினர்கள் ஏறக்குறைய 100 பேரைச் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அவ்வமைப்பின் 20 ஆவது ஆண்டிற்காக தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

எதிர்நோக்கு ஒருபோதும் ஏமாற்றம் தராது என்ற யூபிலி 2025 ஆம் ஆண்டு மையக்கருத்தை முன்வைத்து இளையோரிடம் உரையாடிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சந்தேகம் மற்றும் அவநம்பிக்கையுடன் எதிர்காலத்தைக் காண்பதால் மனச்சோர்வு அடைபவர்களை நாம் அடிக்கடி சந்திக்கின்றோம், எனவே இளையோர் எதிர்நோக்கின் கைவினைஞர்களாக இருப்பது எப்படி என்பதை அறிந்துகொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

எதிர்நோக்கு இளைஞர்களிடமிருந்து ஒருபோதும் திருடப்படக் கூடாது என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், நிறுவனங்களுடனான உரையாடல் வழியாக, உள்ளூர், தேசிய மற்றும் ஐரோப்பிய மட்டங்களில் இளைஞர்களின் உலகத்தைப் முன்னிலைப்படுத்த அழைக்கப்படும் ஆலோசனைக் குழுவாக இருக்கும் அவ்வமைப்பினர், வலையமைப்பின் வழியாக இளையோர் செயலில் பங்கேற்பதை ஊக்குவிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

குரலற்றவர்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்றும், வறுமை, கல்வியறிவு, போதைப்பொருள் ஆதிக்கம் போன்ற பிரச்சனைகளால் சமூக ரீதியாக பாதிக்கப்பட்டவர்கள், கனவு காண முடியாதவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள் என அனைவருக்காகவும் குரல் கொடுப்பவர்களாக இருக்க வேண்டும் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

பன்முகத்தன்மையில், மனித மற்றும் திறந்த உறவுகளின் வலையமைப்பை உருவாக்குவதற்கான அர்ப்பணிப்பைப் பகிர்ந்து கொள்ளும் "கல்வி கிராமம்" நமக்குத் தேவை என்றும், வாழ்க்கையின் அழகுக்கும் புதுமைக்கும் சாட்சியாக இருக்க இளைஞர்கள் அழைக்கப்படுகின்றனர் என்றும் கூறினார் திருத்தந்தை.

குழந்தைகளுடன் விளையாடுங்கள், முதியவர்களை அரவணைத்து வாழுங்கள் என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், இச்செயல் இளையோரின் இளமையை பலப்படுத்தும் என்றும், கிறிஸ்தவர்களாகிய நாம் இயேசுவுடனான சந்திப்பின் வழியாக நம்பிக்கையையும் அவரது முகத்தையும் பெறுகின்றோம் என்றும் கூறினார்.

இளையோர் தங்கள் பணியில் சவால்கள் மற்றும் சிரமங்களை எதிர்கொள்ளும்போதும், மோதல்களை சந்திக்கும்போதும் பயப்பட வேண்டாம் என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், மோதல்கள் நம்மை வளரச் செய்கின்றன, அது ஒரு சிக்கலான வழி போன்றது அதிலிருந்து வெளியேற மற்றொருவரின் உதவி நமக்கு தேவைப்படுகின்றது என்றும் கூறினார்.

வாழ்க்கையில், மோதல்களைக் கடந்து செல்லவும், செவிசாய்க்கும் திறனில் வளரவும், பிறரை அடையாளம் காணவும், ஒருவருக்கொருவர் வளர்ச்சி பெறவும், பொறுமை மிகவும் தேவை என்றும், அருளாளர் பியர் ஜியோர்ஜியோ ஃப்ராசாத்தி போல, நற்செய்தியின் மகிழ்ச்சியை வாழ்வில் கண்டு, இயேசுவைப் பற்றி அறிந்துகொள்ளவும், அவருடைய நிலைத்தத் தன்மை, துணிவு, மகிழ்ச்சியைப் பின்பற்றவும் வாழ வலியுறுத்தினார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 November 2024, 14:35