ҽ

கலாச்சாரம் மற்றும் கல்விக்கான திருப்பீடத்துறையினருடன் திருத்தந்தை கலாச்சாரம் மற்றும் கல்விக்கான திருப்பீடத்துறையினருடன் திருத்தந்தை   (Vatican Media)

கல்வி கற்பது என்பது மற்றவர்களின் வளர்ச்சிக்குத் துணைபுரிவது!

தற்போதைய ‘தொழில்நுட்பப் புரட்சியை’ அதன் நன்மைகள் மற்றும் ஆபத்துகளை வெளிச்சம் போட்டுக் காட்ட நமது பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சி மையங்களை நான் கேட்டுக்கொள்கிறேன் : திருத்தந்தை

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

"நாம் எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்" என்பது நமது கலாச்சார மற்றும் கல்வித் திட்டங்களை வளர்ப்பதில் நமது தெளிந்து தேர்தலுக்கு முதன்மை வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நவம்பர் 21, இவ்வியாழனன்று, கலாச்சாரம் மற்றும் கல்விக்கான திருப்பீடத்துறையின் முதல் ஆண்டு நிறையமர்வு கூட்டத்தின் பங்கேற்பாளர்களைத் திருப்பீடத்தில் சந்தித்தபோது அவர்களுக்கு வழங்கிய உரையில் இவ்வாறு அவர்களிடம் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.

ஏற்கனவே சொன்னதை செய்துவிட்டதை திரும்பத் திரும்பச் செய்யும் தானியங்கிகள் நம் உலகத்துக்குத் தேவையில்லை, மாறாக, புதிய ஆடற்கலைஞர்கள், நமது வளமான மனித வளங்களின் புதிய மொழிபெயர்ப்பாளர்கள், புதிய சமூக கவிஞர்கள்தாம் நமது உலகிற்குத் தேவை என்று கூறினார் திருத்தந்தை.

சமத்துவமின்மை, உள்நாட்டு வறுமை, புறக்கணிப்பு ஆகியவற்றை நீக்குவதன் வழியாக உலகத்தை மாற்றுவதற்கு உதவுவதற்குத் தயாராக இருக்கும் நபர்களை உருவாக்கும் திறன் கொண்ட ஒரு கலாச்சார பார்வை இல்லாத நிலையில் 'முடிவுகளை' மட்டுமே உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட கல்வி மாதிரிகள் பயனற்றவை என்று தனது உரையில் எச்சரித்தார் திருத்தந்தை.

 "அவர் வாக்களித்தபடியே நீதி குடிகொண்டிருக்கும் புதிய விண்ணுலகும் புதிய மண்ணுலகும் வரும் என நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்" (2 பேது 3:13)  என்று புனித பேதுருவின் இரண்டாவது கடிதம் நமக்கு நினைவூட்டுவது போல, நமது பள்ளிகள், பல்கலைக்  கழகங்கள் மற்றும் கலாச்சார மையங்கள் யாவும் நற்காரியம் ஒன்றை எப்படி அடைய விரும்புவது, ஆசைப்படுவது மற்றும் கனவு காண்பது என்பதைக் கற்பிக்கும் இடங்களாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார் திருத்தந்தை.

இந்த அர்த்தத்தில், கல்வி மற்றும் கலாச்சாரத் துறைகளில் உங்கள் பணியை மற்றவர்கள் தங்கள் எல்லைகளை விரிவுபடுத்துவதற்கும், உள் உயிர்ச்சக்தியால் நிரம்பி வழிவதற்கும், புதிய வாய்ப்புகளுக்கான இடத்தை உருவாக்குவதற்கும், அவர்கள் பெற்ற கடவுளின் கொடைகளை  பகிர்ந்து கொள்வதற்கும் அழைப்பு விடுக்க வேண்டும் என்று நான் உங்களை வலியுறுத்துகிறேன் என்று கூறிய திருத்தந்தை, அவற்றை மேலும் பெருகச் செய்ய கல்வியாளர்களாகவும் கலைஞர்களாகவும் நமது பணி மற்றவர்களுக்குச் செல்ல வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 November 2024, 15:46