ҽ

எட்டாம் ஆண்டு உலக வறியோர் தினத் திருப்பலி மறையுரை

இரக்கம் மற்றும் பிறரன்புச் செயல்களால் இணைந்த நமது வாழ்வுதான் இறைவனது உடனிருப்பின் அடையாளமாக மாறுகின்றது

மெரினா ராஜ் - வத்திக்கான்

இயேசுவின் சீடர்களாகிய நாம் தூயஆவியின் வழியாக இயேசு தரும் இந்த நம்பிக்கையை உலகில் விதைக்க முடியும் என்றும், நீதி மற்றும் ஒற்றுமையின் விளக்குகளை நாம்தான் ஏற்ற வேண்டும் நம்மால் தான் ஏற்ற முடியும், இறைவனின் அருள் நம்மை ஒளிவீசச் செய்கின்றது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நவம்பர் 17 ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவிலில் நடைபெற்ற எட்டாம் ஆண்டு அகில உலக வறியோர் தின திருப்பலியில் வழங்கிய மறையுரையின்போது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நமது இதயத்தை எப்போதும் நிறைத்திருக்கும் வேதனை மற்றும் நம்பிக்கை என்னும் இரண்டு எதார்த்தங்களை பற்றி சிந்திக்க அழைப்புவிடுத்தார்.

இருள் சூழ்ந்த நேரத்திலும், பாழடைந்து இடிந்து விழுவது போல் தோன்றும் சூழலிலும்  ​​கடவுள் நம்மில் வருகிறார், நம் அருகில் வருகின்றார், நம்மை மீட்க ஒன்றிணைக்கின்றார் என்றும், இதயம் மற்றும் காலத்தின் கடினமான சூழலிலும் கூட அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர்களாக சுடர்விட வேண்டும் என இயேசு நம்மை அழைக்கின்றார் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

“அந்நாள்களில் அவ்வேதனைகளுக்குப் பிறகு கதிரவன் இருண்டுவிடும்; நிலா ஒளிகொடாது. விண்மீன்கள் வானத்திலிருந்து விழுந்த வண்ணமிருக்கும்; வான்வெளிக் கோள்கள் அதிரும்” என்ற நற்செய்தி வரிகளை மேற்கோள்காட்டிய திருத்தந்தை அவர்கள்,

வேதனை என்னும் நமது காலத்தின் பரவலான உணர்வு, சமூகத் தொடர்பு பிரச்சனைகள், காயங்களினால், உலகை மேலும் பாதுகாப்பற்றதாகவும் எதிர்காலத்தை மேலும் நிச்சயமற்றதாகவும் ஆக்குகிறது என்று எடுத்துரைத்தார்.

போரின் கொடுமையால் இறப்பு, பசி மற்றும் பஞ்சத்தினால் எத்தனையோ சகோதர சகோதரிகள் ஒடுக்கப்படும் நிலையில் சூரியன் இருண்டு விடுவதையும், நிலா ஒளிதராமல் இருப்பதையும் காண்கின்றோம் என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை அவர்கள், அச்சூழலிலும் கடவுள் இருப்பதைப் பார்க்கத் தவறிவிடுகின்றோம் என்று கூறினார்.

உலகின் ஆபத்தான நிலையிலும் வேதனையிலும் கூட, கடவுளின் அன்பின் உடனிருப்பு நம்மை நெருங்கி வருகிறது, நம்மைக் கைவிடாது, நம் மீட்பிற்காக செயல்படுகிறது என்றும், அப்போது மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும் மானிடமகன் மேகங்கள் மீது வருவதைக் காண்பார்கள்.  அவர் வானதூதரை அனுப்பி, அவர்கள் மண்ணுலகில் ஒரு கோடியிலிருந்து விண்ணுலகில் மறுகோடிவரை நான்கு திசைகளிலிருந்தும் தேர்ந்துகொள்ளப்பட்டவர்களைக் கூட்டிச் சேர்ப்பார் என்ற நற்செய்தி வரிகளையும் எடுத்துரைத்தார்.

கல்வாரியில், இயேசுவின் இறப்பின்போது சூரியன் இருளடையும் மற்றும் உலகம் முழுவதும் இருள் இறங்கும்; ஆனால் அந்த நேரத்தில் உயிர்த்த மானிடமகன் மேகங்களின் மீது வருவார், அவருடைய உயிர்த்தெழுதலின் ஆற்றல் மரணத்தின் சங்கிலிகளை உடைக்கும், ஒரு புதிய உலகம் பிறக்கும் என்ற இறைவார்த்தைகள் வழியாக நமக்கு நம்பிக்கையை அளிக்கின்றார் என்றும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை.

இரக்கம் மற்றும் பிறரன்புச் செயல்களால் இணைந்த நமது வாழ்வுதான் இறைவனது உடனிருப்பின் அடையாளமாக மாறுகின்றது என்றும், துன்புறும் ஏழைகளின் காயங்களை ஆற்றவும், அவர்களின் நிலையை மாற்றவும் எப்போதும் அவர்களுடன் நெருக்கமாக இருக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 November 2024, 12:14