ҽ

ஆறாம் பவுல் அரங்கத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் ஆறாம் பவுல் அரங்கத்தில் திருத்தந்தை பிரான்சிஸ்  (VATICAN MEDIA Divisione Foto)

தியாகம் மற்றும் விடாமுயற்சியைக் கொண்டது மீனவர்களின் பணி

சவால்கள், பிரச்சனைகள் ஆகிய இரண்டையும் எதிர்கொண்டு தியாகம், விடாமுயற்சி, கடின உழைப்புடன் செயல்படும் மீனவர்களின் பணி பாராட்டத்தக்கது - திருத்தந்தை பிரான்சிஸ்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

மீன்பிடித்தொழிலாளர்களின் பணி கடினமானது, தியாகம் மற்றும் விடாமுயற்சியைக் கொண்டது என்றும், அதிகரித்து வரும் செலவுகள், அதிகாரத்துவம், நியாயமற்ற போட்டி போன்ற சவால்களையும் புதிய பிரச்சனைகளையும் எதிர்கொள்ளும் பணி என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நவம்பர்  23 சனிக்கிழமை வத்திக்கான் தூய ஆறாம் பவுல் அரங்கத்தில் பல்வேறு இத்தாலிய மீன்பிடி சமூகங்களைச் சேர்ந்த மீனவர்கள் மற்றும் இத்தாலிய ஆயர் பேரவையால் நட்த்தப்படும் ஐரோப்பாவின்  நலவாழ்வுப் பணிகளில் உலகளாவிய மற்றும் நிலைத்த தன்மை என்னும் மாநாட்டின் பங்கேற்பாளர்கள் ஏறக்குறைய 5200 பேரைச் சந்தித்தபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மீனவர்களான திருத்தூதர்களை அழைத்த இயேசு உங்களை நான் மனிதர்களைப் பிடிப்பவர்களாக்குவேன் என்று கூறுகின்றார் என எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், ஒன்றிணைந்து கடலுக்குள் சென்று மீன்பிடிக்கும் செயலானது ஒவ்வொருவரின் பணியினது வெற்றியும் அனைவரின் பங்களிப்பைப் பொறுத்தது என்பதை எடுத்துரைக்கின்றன என்றும் கூறினார்.

நாங்கள் இரவு முழுவதும் உழைத்தோம் மீன்கள் ஏதும் அகப்படவில்லை என்று திருத்தூதர்கள்  கூறும் வார்த்தைகள் அவர்கள் கடின உழைப்பாளர்கள் என்பதை எடுத்துரைக்கின்றன என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை அவர்கள், சவால்கள், பிரச்சனைகள் ஆகிய இரண்டையும் எதிர்கொண்டு தியாகம், விடாமுயற்சி, கடின உழைப்புடன் செயல்படும் அம்மீனவர்களின் பணியினைப் பாராட்டினார்.

ஐரோப்பாவின் நலவாழ்வுப் பணிகளில் உலகளாவியம்  மற்றும் நிலைத்த தன்மை பற்றிய மாநாட்டின் உறுப்பினர்கள் அனைவரும் ஒரு குழுவாக இணைந்து பணியாற்றுவது ஒரு முக்கியமான பணி என்பதை புரிந்து கொள்ளவேண்டும் என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், நம்மைப் பராமரிப்பவர்களை நாம் பராமரித்தல், கடைநிலையில் இருப்பவர்கள் மேல் இரக்கம் காட்டுதல் என்னும் இரண்டு நிலைகளில் தனது கருத்துக்களை அவர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

நலவாழ்வுப் பணியாளர்கள் தாங்கள் ஆறுதல் அளித்துக் காக்கும் மக்களைப்போலவே பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் என்றும், ஏழைகள் துன்புறுவோர் என எல்லா நிலையில் இருக்கும் மக்களையும் இரக்கத்தோடு அணுகி பணியாற்ற வேண்டும் என்றும், யாரையும் ஒதுக்கிவிடாமல் அனைவரையும் உள்ளடக்கிய ஒரு குழுவாக இணைந்து செய்லப்ட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 November 2024, 12:18