ҽ

புதன் மறைக்கல்வி உரை - திருமணத்தில் கடவுளின் கொடையாம் தூய ஆவி

அக்டோபர் 23 புதன்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு ‘தூய ஆவியாரும் மணமகளும். நம் நம்பிக்கையாம் இயேசுவை நோக்கி இறைமக்களை வழிநடத்தும் தூய ஆவியார்’ என்ற தலைப்பின், பத்தாம் பகுதியாக “தூய ஆவி மற்றும் திருமணம் எனும் திருவருளடையாளம் என்ற தலைப்பில் தனது கருத்துக்களை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

அக்டோபர் 23 புதன்கிழமை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைக்கல்வி உரைக்கு செவிசாய்ப்பதற்காக வத்திக்கான் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகள் மத்தியில் திறந்த காரில் வலம் வந்த திருத்தந்தை, அனைவரையும் வாழ்த்தியும், சிறு குழந்தைகளை ஆசீர்வதித்தும் மறைக்கல்வி உரை வழங்கும் இடத்தை வந்தடைந்தார். சிலுவை அடையாளம் வரைந்து கூட்டத்தைத் துவக்கி துவக்கி வைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ். திருத்தூதூதர் யோவானின் முதல் திருமடலில் உள்ள அன்பும் நம்பிக்கையும் என்ற தலைப்பின் கீழ் உள்ள இறைவார்த்தைகள் பல்வேறு ஐரோப்பிய மொழிகளில் வாசித்தளிக்கப்பட்டன.

1 யோவான் 4: 7-8

அன்பார்ந்தவர்களே, ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துவோமாக! ஏனெனில், அன்பு கடவுளிடமிருந்து வருகிறது. அன்பு செலுத்தும் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள். அவர்கள் கடவுளை அறிந்துள்ளார்கள். அன்பில்லாதோர் கடவுளை அறிந்து கொள்ளவில்லை; ஏனெனில், கடவுள் அன்பாய் இருக்கிறார்.

அதனைத் தொடர்ந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கூடியிருந்த மக்களுக்கு தூய ஆவி என்னும் கடவுளின் கொடை, தூயஆவியும் திருமணம் என்னும் திருவருளடையாளமும் என்ற தலைப்பில் தனது கருத்துக்களை வழங்கினார். திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி உரைக் கருத்துக்களுக்கு இப்போது நாம் செவிசாய்ப்போம்.

அன்பான சகோதர சகோதரிகளே, காலை வணக்கம்!

தூய ஆவியானவர், திருஅவையின் நம்பிக்கையில் எவ்வாறு செயலாற்றுகின்றார் என்பதை நாம் நமது கடந்த வார மறைக்கல்வி உரையில் அறிந்துகொண்டோம். திருஅவையில் தூய ஆவியின் பிரதிபலிப்பு நாம் எடுத்துரைக்கும் நம்பிக்கை அறிக்கையுடன் நிற்கவில்லை. இது கிழக்கிலும் மேற்கிலும், திருஅவை தந்தையர்கள் மற்றும் அறிஞர்களின் பணியின் வழியாகத் தொடர்ந்தது. இன்று, குறிப்பாக, இலத்தீன் பாரம்பரியத்தில் உருவாக்கப்பட்ட தூய ஆவியின் கோட்பாட்டின் சில கருத்துக்களை நாம் அறிந்துகொள்வோம். முழு கிறிஸ்தவ வாழ்க்கையையும் குறிப்பாக திருமணத்தின் புனிதத்தையும் எவ்வாறு தூய ஆவி ஒளிரச் செய்கின்றார் என்பதைக் கண்டறிவோம்.

 கடவுள் அன்பாய் இருக்கிறார் என்ற திருத்தூதர் யோவானின் இறைவார்த்தைகளின்படி புனித அகுஸ்தீனார் தூயஆவி கோட்பாட்டின் முக்கிய தோற்றுவிப்பாளராக இருக்கின்றார். அன்பு என்பது அன்பு செய்பவர், அன்பு செய்யப்படுபவர், அவர்களை ஒன்றிணைக்கும் அன்பு ஆகியவையாக கருதப்படுகின்றது. தமத்திரித்துவத்தில் இறைத்தந்தை அன்பு செய்பவராக, எல்லாவற்றின் தொடக்கமும் ஆதாரமுமாக இருக்கின்றார். இறைமகன் இயேசு அன்பு செய்யப்படுபவராகவும், தூய ஆவியார் அவர்களை இணைக்கும் அன்பாகவும் காணப்படுகின்றார். கிறிஸ்தவர்களின் கடவுள் ஒரு தனித்துவமான கடவுள். தனிமையாக இருக்கும் கடவுள் அல்ல. அவரின் ஒற்றுமை, அன்பின் ஒற்றுமை. இதன் அடிப்படையில் தூய ஆவியை  மூன்றாம் நபர்  என்று அழைக்காமல் முதலாம் நபர்கள் என்று பன்மையில் அழைக்க பலர் முன்மொழிந்தனர். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தந்தை மற்றும் மகனின் தெய்வீகத்தில், வெவ்வேறு நபர்களுக்கு இடையிலான ஒற்றுமையின் பிணைப்பில், திருஅவையின் ஒற்றுமையின் கொள்கையில், பலரில் ஓருடலாகத் திகழ்பவர் என்று கூறலாம்.

தூய ஆவியார் நம் குடும்பங்களுக்கு என்ன சொல்ல விரும்புகின்றார் என்பதைப் பற்றி இன்று சிந்திப்போம். தூய ஆவிக்கும் திருமணத்திற்கும் என்ன தொடர்பு? அது ஏன் மிக முக்கியமானது, அத்தியாவசியமானது என்பதை விளக்க விரும்புகின்றேன். கிறிஸ்தவத்தில் திருமணம் என்பது ஆணும் பெண்ணும் ஒருவர் மற்றவருக்குத் தன்னைக் கொடுக்கும் புனிதமான ஒன்றாகும். இதனை இவ்வுலகைப் படைத்த இறைவன் "தனது சொந்த சாயலில் மனிதனைப் படைத்தபோது, ஆணும் பெண்ணும் அவர்களைப் படைத்த போதே எண்ணினார்". எனவே தம்பதியர் என்பது திரித்துவம் என்ற அன்பின், ஒற்றுமையின், முதலும் மிக அடிப்படையான உணர்தலாகவும் விளங்குகின்றது.

வாழ்க்கைத் துணைவர்கள், “நாம்” என்பதை உருவாக்க வேண்டும். ஒருவருக்கொருவர்  “நீ”  “நான்” என்று இருந்தாலும் குழந்தைகள் மற்றும் உலகின் முன் “நாம்” என்று நிற்க வேண்டும். "உன் தந்தையும் நானும் உம்மை தேடிக்கொண்டிருந்தோமே.." என்று பன்னிரு வயதில் காணாமல் போன இயேசுவைக் கோவிலில் கண்டபோது அன்னை மரியா சொன்னது போல, நமது குடும்பத்தில் உள்ளவர்களும் நானும் உன் தந்தையும், உன் தாயும் என்று கூறுவதும் அதனைக் கேட்பதும் எவ்வளவு நல்லது. பெற்றோரின் இந்த ஒற்றுமை குழந்தைகளுக்கு மிகவும் தேவை, இந்த ஒற்றுமை உடைந்தால் அவர்கள் மிகவும் துன்புறுகின்றார்கள்.

மிகச்சிறந்தவற்றைக் கொடையாகக் கொடுப்பதில் திருமணம் என்னும் அருளடையாளத்திற்கு தூய ஆவியின் ஆற்றலும், அருகிருப்பும் தேவைப்படுகின்றது. தூய ஆவியார் எங்கு நுழைகின்றாரோ அங்கு தன்னைக் கொடுக்கும் திறன் பிறப்பெடுக்கின்றது. திருஅவையின் சில தந்தையர்கள், தமத்திரித்துவத்தில் தந்தை மற்றும் மகனின் இணக்கமுள்ள கொடையாக, அவர்களிடையே ஆட்சி செய்யும் மகிழ்ச்சிக்குக் காரணம் தூய ஆவியானவரே என்று எடுத்துரைத்தனர்.

பாறையை விட மணல்மீது வீட்டைக் கட்டுவது எளிதாகவும் துரிதமானதாகவும் நமக்குத் தோன்றலாம்; ஆனால் அதனால் விளைவது என்ன என்பதையும் இயேசு நமக்கு எடுத்துரைக்கின்றார் (மத் 7:24-27). மணலில் கட்டப்பட்ட வீடுகள் போன்ற திருமணங்களின் விளைவுகளால் குழந்தைகள் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றார்கள் என்பதை நாம் அறிவோம். பெற்றோரைப் பிரிந்து வாழும் குழந்தைகள் அவர்களது அன்பு கிடைக்காமல் பெரிதும் துன்புறுகின்றார்கள். கானாவூர் திருமணத்தில் அன்னை மரியா திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது என்று கூறியதைப் போல இன்றைய தம்பதியினர் சொல்கின்றனர். இயேசு செய்த அற்புதத்தைப் போல, அவர்களது வாழ்வில் அற்புதத்தை தூய ஆவியார் நிகழ்த்துகின்றார். இயேசு தண்ணீரை திராட்சை இரசமாக மாற்றியது போல, தூய ஆவி ஒன்றிணைந்து இருத்தலால் கிடைக்கும் புதிய மகிழ்வை உருவாக்குகின்றார். இது புதுமையான ஒரு மாயை அல்ல பல திருமணங்களில் தூய ஆவியார் தம்பதிகள் வாழ்வில் இவ்வாறு செயல்பட்டிருக்கின்றார்.

தூய ஆவி ஒற்றுமையை ஏற்படுத்துகின்றார் என்ற ஆழமான ஆன்மிக தயாரிப்பானது சட்ட, ஆன்மிக, உளவியல் அடிப்படையில் திருமணத்திற்காகத் தங்களைத் தயாரிக்கும் தம்பதியருக்கு கொடுக்கப்பட்டால் நன்மையாக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையில் கடவுளின் விரல் இருக்கின்றது. அதுவே தூய ஆவி.

திருத்தந்தையின் உரையைத் தொடர்ந்து மறைக்கல்வி உரையின் சுருக்கமானது பல்வேறு ஐரோப்பிய மொழிகளில் வாசித்தளிக்கப்பட்டது.

இத்தாலிய மொழி பேசும் திருப்பயணிகளை வாழ்த்திய திருத்தந்தை அவர்கள், செலானோ, பூழியா, அவ்ரேசா, பங்குத்தளமக்களையும், ஃபாய்க்கியோ எம்மானுவேல் இயக்கத்தாரையும் வாழ்த்தி, தூய ஆவியின் ஆற்றலுடன் இயேசுவின் துணிவுள்ள மற்றும் மகிழ்ச்சியுள்ள சான்றுகளாக, திருஅவை குடும்பம், பங்குத்தளம் என எல்லா இடங்களிலும் இருங்கள் என்று வாழ்த்தினார்.

இளைஞர்கள், நோயாளிகள், முதியவர்கள் மற்றும் புதுமணத் தம்பதிகளை வாழ்த்திய திருத்தந்தை அவர்கள், அக்டோபர் மாதமானது, திருஅவையின் மறைப்பணியில் நமது செயலூக்கமான ஒத்துழைப்பைப் புதுப்பிக்க நம்மை அழைக்கிறது என்றும், எல்லா இடங்களிலும் நற்செய்தியின் மறைப்பணியாளர்களாக இருப்பது எப்படி என்பதை அறிந்து கொள்ளுங்கள். நற்செய்தியைப் பற்றி இன்னும் தெரியாதவர்களுக்கு அதைக் கொண்டு வர போராடுபவர்களுக்கு உறுதியான உதவி மற்றும் செபத்தின் ஆன்மிக ஆதரவை வழங்குங்கள் என்றும் எடுத்துரைத்தார்.

மேலும் அமைதிக்காக  செபிப்போம் என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், இன்று, அதிகாலையில், உக்ரைனில் இறந்தவர்களின் புள்ளிவிவரங்களைப் பெற்றாதாகவும் அது பயங்கரமானது என்றும் எடுத்துரைத்து, போர் மன்னிப்பை வழங்காது அது எப்போதும் தோல்விதான். போரினால் இறந்த அனைவருக்கும், நம் அனைவருக்கும் உலக மக்கள் அனைவருக்கு இறைவன் அமைதியைக் கொடுக்க செபிப்போம் என்றும் கூறினார்.

மியான்மார், உக்ரைன், பாலஸ்தீனம், இஸ்ரயேல் என போரினால் பாதிக்கப்பட்ட எல்லா நாட்டு மக்களையும் நினைவுகூர்ந்து அவர்களுக்காக செபிப்போம் என்று கேடுக்கொண்ட திருத்தந்தை அவர்கள், இன்று அதிக லாபம் தரும் முதலீடுகள் ஆயுத தொழிற்சாலைகளில் தான் செய்யப்படுகின்றன. மரணத்தால் அவை பணம் சம்பாதிக்கின்றன, எனவே அனைவரும் இணைந்து அமைதிக்காக செபிப்போம் என்றும் எடுத்துரைத்தார்.

இவ்வாறு தனது செப விண்ணப்பங்களைத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிறைவு செய்ய விண்ணகத்தந்தையை நோக்கிய செபத்திற்குப்பின் கூடியிருந்த திருப்பயணிகள் அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 October 2024, 11:54

அண்மைய மறைக்கல்வியுரைகள்

அனைத்தையும் படிக்கவும் >