ҽ

புதன் மறைக்கல்வி உரை – வார்த்தை மனுவுருவானதில் தூய ஆவியார்

தூய ஆவியின்றி திருஅவை இல்லை. தூய ஆவியின்றி திருஅவையால் முன்னோக்கிச் செல்ல முடியாது. திருஅவையில் வளர்ச்சி இருக்காது. நற்செய்தியை அறிவிக்க இயலாது.

மெரினா ராஜ் - வத்திக்கான்

‘தூய ஆவியாரும் மணமகளும். நம் நம்பிக்கையாம் இயேசுவை நோக்கி இறைமக்களை வழிநடத்தும் தூய ஆவியார்’ என்ற தலைப்பில், ஒரு புதிய மறைக்கல்வித் தொடரைத் துவக்கி, கடந்த ஜூன் மாதத்தின் நான்கு வாரங்களாக வழங்கிவந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதன் ஐந்தாம் பகுதியாக இயேசு தூயஆவியின் செயல்பாட்டினால் கன்னிமரியா வழியாக மனுஉரு எடுத்தார். இயேசுவை எப்படிக் கருத்தரித்து பெற்றெடுப்பது? என்ற மையக்கருத்தில் தனது கருத்துக்களை திருப்பயணிகளுக்கு எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.     

கோடை விடுமுறையின் காரணமாக கடந்த ஜூலை மாதம் முழுவதும் தனது தனிப்பட்ட மற்றும் பொது சந்திப்புக்களுக்கு சற்று இடைவெளி கொடுத்து இருந்தார். ஆகஸ்ட் 7 இப்புதனன்று தனது புதன் பொது மறைக்கலவி உரையினை மக்களுக்கு மீண்டும் வழங்கத் துவங்கினார் திருத்தந்தை. தொடர் மறைக்கல்வி உரையின் ஐந்தாம் பகுதியை வார்த்தை மனு உருவானதில் தூய ஆவியார் என்ற தலைப்பின் கீழ் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கோடை வெயிலின் அதிக வெப்பம் காரணமாக புதன் மறைக்கல்வி உரையானது திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கத்தில் நடைபெற்றது. உலகின் பல பகுதிகளிலிருந்தும் ஏராளமான மக்கள் திருத்தந்தையின் மறைக்கல்வி உரைக்கு செவிசாய்க்க மிகுந்த ஆர்வத்துடன் கூடி இருந்தனர். அரங்கத்தின் மேடைக்குத் திருத்தந்தை அவர்கள் வருகை தர கூடியிருந்த மக்கள் அனைவரும் எழுந்து நின்று, மிகுந்த ஆரவாரத்துடன் கரவொலி எழுப்பி திருத்தந்தையை வரவேற்றனர். சிலுவை அடையாளம் வரைந்து திருத்தந்தை அவர்கள் மறைக்கல்வியைத் துவக்கிவைக்க, லூக்கா நற்செய்தியில் உள்ள இயேசு பிறப்பின் முன்னறிவிப்பு என்னும் தலைப்பின் கீழ் உள்ள இறைவார்த்தைகள் இத்தாலியம், ஆங்கிலம், போர்த்துக்கீசியம், அரபு, பிரெஞ்சு, போலந்து, ஜெர்மானியம் போன்ற ஐரோப்பிய மொழிகளில் வாசித்தளிக்கப்பட்டன.    

லூக்கா 1: 30,31,34,35

வானதூதர் அவரைப் பார்த்து, “மரியா, அஞ்சவேண்டாம்; கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர். இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். அதற்கு மரியா வானதூதரிடம், “இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே!” என்றார். வானதூதர் அவரிடம், “தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால், உம்மிடம் பிறக்கப் போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும்.

இறைவார்த்தைகள் வாசிக்கப்பட்டதைத் தொடர்ந்து வார்த்தை மனுஉருவான செயலில் தூயஆவியார் என்ற மையக்கருத்தில் தனது கருத்துக்களை எடுத்துரைக்க ஆரம்பித்தார் திருத்தந்தை. திருத்தந்தையின் மறையுரைக் கருத்துக்களுக்கு இப்போது நாம் செவிசாய்ப்போம்.      

அன்பான சகோதர சகோதரிகளே, காலை வணக்கம்!

இன்றைய மறைக்கல்வியின் வழியாக நாம் மீட்பு வரலாற்றின் இரண்டாம் கட்டத்திற்குள் நுழைகிறோம். படைப்பின் பணியில் தூய ஆவியாரைப் பற்றி சிந்தித்த நாம் மீட்புப் பணியில் தூய ஆவியாரின் செயல்பாடு என்ன என்பதைப் பற்றி இவ்வாரங்களில் காண்போம்.

இன்றைய மையக்கருத்து வார்த்தை மனுஉருவானதில் தூயஆவியார். "தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால், உம்மிடம் பிறக்கப் போகும் குழந்தை தூயது. (1:35) என்று எடுத்துரைக்கின்றார் லூக்கா நற்செய்தியாளர். நற்செய்தியாளர் மத்தேயுவோ, மரியா மற்றும் தூயஆவியாரைப் பற்றிய இந்த அடிப்படையை  கன்னி மரியா "தூய ஆவியால் கருத்தரித்து ஓர் ஆண்மகவைப் பெற்றெடுத்தார் என்ற வார்த்தைகள் வழியாக (1:18) உறுதிப்படுத்துகிறார்,

இந்த உண்மையை திருஅவை தனது நம்பிக்கையின் அடையாளமாக இதயத்தில் வைத்துள்ளது. 381ஆம் ஆண்டில் கான்ஸ்டான்டினோபிளின் பொதுச்சங்கமானது தூயஆவியாரின் தெய்வீகத்தை வரையறுத்தது. அதுவே நமது நம்பிக்கை அறிக்கையின் ஒரு பகுதியாக மாறியது. இதனை நிசேயா – கான்ஸ்டாண்டி நோபில் நம்பிக்கை அறிக்கை என அழைக்கப்படுகின்றது. தூய ஆவியால் கருத்தரித்து கன்னி மரியிடம் உடல் எடுத்து மனிதர் ஆனார் என்று நாம் எடுத்துரைக்கின்றோம்.

கிறிஸ்தவ ஒன்றிப்பின், நம்பிக்கையின் அடையாளமாக எல்லா கிறிஸ்தவர்களாலும் ஒன்றிணைந்துக் கூறப்படுகின்றது. மேலும் கத்தோலிக்கர்களிடம் பண்டைய காலத்திலிருந்தே வழக்கத்தில் இருந்து வரும் அன்றாடம் செபிக்கப்படும் செபமான மூவேளை செப உரையிலிருந்து இது பெறப்பட்டது.   

இந்த நம்பிக்கை செபமானது, கன்னி மரியா மணமகளாக திருஅவையின் அடையாளமாக இருக்கின்றார் என்பதை எடுத்துரைக்கின்றது. இதனைக்குறித்தே தூய லெயோனே மாஞ்னோ, “தூய ஆவியாரால் கன்னி மரியின் மகனாகப் பிறந்த இயேசு, அதே தூய ஆவியின் ஆற்றலால் மணமகளாம் திருஅவையைப் பலப்படுத்துகின்றார்” என்று குறிப்பிடுகின்றார். இந்த இணையான தன்மையை Lumen Gentium அதாவது மக்களின் ஒளி என்ற இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் திருஅவை ஏடும் “தனது நம்பிக்கை மற்றும் கீழ்ப்படிதலால் கன்னி மரியா இவ்வுலகில் தூயஆவியின் ஆற்றலினால் கடவுளின் மகனைப் பெற்றெடுத்தார் என்று எடுத்துரைக்கின்றது. திருஅவையும் கன்னி மரியின் தூய்மையின் மறைபொருளை தியானித்து பிறரன்புப் பணிகள், இறைவார்த்தை, நற்செய்தி அறிவித்தல் திருமுழுக்கு போன்றவற்றின் வழியாக அழியாத புதிய வாழ்வை தனது செயல்களால் வெளிப்படுத்துகின்றது.  

கருவுறுதல்,பெற்றெடுத்தல் என்னும் இரண்டு வினைச்சொற்களின் மீது நாம் நமது கவனத்தைத் திருப்புவோம். கருவுற்றிருக்கும் அந்த இளம் பெண் ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார்; என்று எசாயா இறைவாக்கினரும், இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; என்று லூக்கா நற்செய்தியாளரும் இந்த இந்த இரண்டு வினைச்சொற்களைப் பயன்படுத்துகின்றனர். மரியா முதலில் கருவுற்றார் அதன்பின் இயேசுவைப் பெற்றெடுத்தார். முதலில் இயேசுவைத் தனக்குள்ளும் தன் இதயத்திலும் உடலிலும் வரவேற்றார், அதன்பின் அவரைப் பெற்றெடுத்தார்.

அவ்வாறே திருஅவையும் முதலில் கடவுளின் வார்த்தையைத் தனக்குள் வரவேற்கின்றது முதலாவதாக நெஞ்சுருக பேசவும், இறைவார்த்தையால் நம்மை நிரப்பவும் அழைக்கின்றது. இரண்டாவதாக  நமது வாழ்வாலும் சான்றுபகர்தலாலும் கிறிஸ்துவைப் பெற்றெடுக்கின்றது. முதலாவது இல்லாமல் இரண்டாவது ஆற்றல் அற்றதாக சாத்தியமற்றதாகிறது. முதலாவது இல்லையெனில் இரண்டாவது பொருளற்றது.

இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே!” என்ற கன்னி மரியின் கேள்விக்கு வானதூதர் “தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். என்று பதிலளிக்கின்றார். திருஅவையும் தனது ஆற்றலுக்கு அப்பாற்பட்ட செயல்களில் இது எவ்வாறு நிகழும்? இயேசு கிறிஸ்துவை எவ்வாறு அறிவிப்பது?  தனது நன்மையை மட்டும் விரும்பும் இவ்வுலகில் இயேசுவின் மீட்பை எவ்வாறு அறிவிப்பது என்று அதே கேள்வியை இயல்பாகக் கேட்கின்றது. அதற்கு தூய ஆவியைப்பெற்றுக்கொள்வீர்கள் எனது சாட்சிகளாக விளங்குவீர்கள் என்று இயேசு திருத்தூதர்களுக்குக் கூறிய பதில் நமக்குக் கூறப்படுகின்றது. தூய ஆவியின்றி திருஅவை இல்லை.  தூய ஆவி இல்லாத திருஅவையால் முன்னோக்கிச் செல்ல முடியாது. திருஅவையில் வளர்ச்சி இருக்காது. நற்செய்தியை அறிவிக்க இயலாது.  

நாம் ஒவ்வொருவரும் சில சமயங்களில் நமது ஆற்றலுக்கு அப்பாற்பட்ட சூழ்நிலைகளில், "இந்த சூழ்நிலையை நான் எப்படி சமாளிக்க முடியும்?" என்ற கேள்வியினை எழுப்புகின்றோம். அப்போது வானதூதர் கன்னி மரியாளுக்கு சொன்ன வார்த்தைகளான “கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை”  என்பதை நினைவில் கொள்வோம். இந்த ஆறுதலான உறுதியுடன் நம் இதயத்தின் பயணத்தை மீண்டும் தொடங்குவோம். நன்றி.

இவ்வாறு தனது மறையுரைக் கருத்துக்களை நிறைவுசெய்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அரங்கத்தில் கூடியிருந்த மக்கள் அனைவரையும் வாழ்த்தி தனது செப விண்ணப்பங்களை அவர்களுக்கு எடுத்துரைத்தார்.

மத்திய கிழக்கின் நிலைமை பற்றி மிகுந்த அக்கறையுடன் தான் தொடர்ந்து அறிந்து கொண்டிருப்பதாகத் தெரிவித்த திருத்தந்தை அவர்கள், துன்புறுத்தப்பட்ட உக்ரைன், மியான்மார், சூடான் ஆகிய நாடுகளுக்காகவும் செபிக்கக்கேட்டுக்கொண்டார். மேலும், போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், மிகவும் விரும்பும் அமைதியை விரைவில் பெறட்டும் என்றும், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் பகுதிகளில் அதிகரித்துவரும்  இனப் பாகுபாடுகள், குறிப்பாக பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை அகற்றுவதற்கான நமது முயற்சிகளிலும் செபத்திலும் ஒன்றிணைவோம் என்றும் கேட்டுக்கொண்டார்.

இவ்வாறு தனது செப விண்ணப்பங்களை நிறைவுசெய்த திருத்தந்தை அவர்கள் கூடியிருந்த மக்களுக்கு தன் அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 August 2024, 12:51

அண்மைய மறைக்கல்வியுரைகள்

அனைத்தையும் படிக்கவும் >