நமது வாழ்க்கைக்குத் தேவையான உணவு இயேசு – திருத்தந்தை
மெரினா ராஜ் - வத்திக்கான்
நமது வாழ்வில் இயேசு நம்மை ஒவ்வொரு நாளும் வியப்பிற்குள்ளாக்குகின்றார், அவரின் வார்த்தைகள் நம்மை வியப்பிற்குள்ளாக்குகின்றன என்றும், விண்ணக உணவு நமது வாழ்க்கைக்கும் நம் எல்லோருக்கும் மிகவும் தேவையான ஒன்று என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆகஸ்ட் 18 ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய ஞாயிறு மூவேளை செப உரையின்போது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், யோவான் நற்செய்தியில் இயேசு கூறும் “விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன் என்பது குறித்து விளக்கமளித்தார்.
நாம் உண்பதற்கு இவர் தமது சதையை எப்படிக் கொடுக்க இயலும்?” என்று இயேசுவோடு வாக்குவாதம் செய்தவர்கள் இயேசுவை புரிந்துகொள்ளாதவர்களாக சந்தேகம் கொள்பவர்களாக இருக்கின்றார்கள் என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், விண்ணக உணவாகிய இயேசுவின் முன் நாம் வியப்புணர்வு மற்றும் நன்றியுணர்வு கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
வியப்புணர்வு
இயேசுவின் வார்த்தைகள் நம்மை வியப்பிற்குள்ளாக்குகின்றன, இயேசு நமது வாழ்வில் எல்லா நேரமும் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றார் என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், விண்ணகத்திலிருந்து. இறங்கி வந்த உணவு நமது எல்லா எதிர்பார்ப்புக்களையும் மீறி ஒரு கொடையாகக் கொடுக்கப்படுகின்றது என்றும் கூறினார்.
இயேசுவின் வாழ்க்கை மாதிரியைப் புரிந்து கொள்ளாதவர்கள், சந்தேகத்திற்கு உரியவர்களாகவே இருக்கிறார்கள் என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை அவர்கள், ஒரு மனிதனின் சதையை உண்பதும், அவனது இரத்தத்தைக் குடிப்பதும் மனிதாபிமானமற்றதாக ஒருபுறம் தெரிந்தாலும், மறுபுறம், மீட்பர் இயேசுவின் இரத்தமும் சதையும் மனிதநேய மீட்பையும், தனது வாழ்க்கையையே நமக்கான உணவாக வழங்கிய அவரின் அர்ப்பணத்தையும் எடுத்துரைக்கின்றது என்று கூறினார்.
நன்றியுணர்வு
நன்றியுணர்வினால், இயேசு எங்கே? எப்படி? நமக்காக நம்முடன் பிரசன்னமாக இருக்கின்றார் என்பதை நாம் அடையாளம் கண்டுகொள்ள முடியும் என்றும், இவ்வுலக மக்களின் நல்வாழ்விற்காக தனது உடலையே உணவாகக் கொடுத்தவர் என்ற நன்றியுணர்வு நமக்கு எப்போதும் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை.
விண்ணகத் தந்தையிடமிருந்து வந்த உயிருள்ள உணவாகிய இயேசு, நம் இதயத்தில் இருக்கும் நம்பிக்கைக்கான பசி, உண்மைக்கான பசி, மீட்பின் பசி ஆகியவற்றைப் போக்குகின்றார் என்று கூறிய திருத்தந்தை அவர்கள், இயேசு நமது வாழ்வின் மிகப்பெரிய தேவையை கவனித்துக்கொள்கிறார், நம்மை மீட்கின்றார் என்றும் கூறினார்.
விண்ணக உணவு என்பது நமது வாழ்வின் எல்லா பிரச்சனைகளையும் திடிரென்று தீர்க்கும் மாயஜாலம் அல்ல மாறாக இவ்வுணவானது ஏழைகளுக்கு நம்பிக்கையை அளித்து அவர்களுக்குத் தீங்கு விளைவிப்பவர்களின் ஆணவத்தை வெல்கின்றது என்றும் கூறினார்.
மீட்பிற்கான பசியும் தாகமும் என் சகோதர சகோதரிகள் அனைவருக்கான தாகமும் என்னிடம் உள்ளதா? இரக்கத்தின் அதிசயமாகிய திருநற்கருணையை நான் பெறும்போது, நமக்காக இறந்து உயிர்த்தெழுந்த இறைவனின் உடலைக் கண்டு வியக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவும் அழைப்புவிடுத்தார் திருத்தந்தை.
இவ்வாறு தனது மூவேளை செப உரையை நிறைவு செய்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், விண்ணக உணவை நாம் பெற கன்னி மரியா நமக்கு உதவி புரிவாராக என்று கூறி மூவேளை செபத்திற்குப் பின் தன் அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்