ҽ

தூத்துக்குடி பனிமயமாதா பேராலயம் தூத்துக்குடி பனிமயமாதா பேராலயம் 

அன்னை ஓர் அதிசயம் – தூத்துக்குடியின் தூய பனிமய அன்னை

தூத்துக்குடியில் அழகுமிக்க பனிமய அன்னையைத் தங்கத்தேரில் வைத்து வீதியெங்கும் பவனி வரும் வழக்கம் 1806ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி முதன்முதலில் துவங்கியது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

தூத்துக்குடி தூய பனிமய அன்னை திருவிழா ஆகஸ்ட் 5ம் தேதி, தூத்துக்குடியில் வெகு ஆடம்பரமாகச் சிறப்பிக்கப்படுகிறது. தூய பனிமய அன்னை திருத்தலப் பசிலிக்கா வரலாறு, முத்துக்குளிக்கும் கடற்கரைவாழ் மீனவ மக்களின் மனமாற்றத்தோடு தொடர்புடையது. பனிமய அன்னை என்றால் போர்த்துக்கீசிய மொழியில் தஸ்நேவிஸ் என்று அர்த்தமாகும். இப்பனிமய அன்னையைத் தமிழில், ‘ஏழு கடல்துறை ஏக அடைக்கலத்தாய்’ என்று பெயரிட்டு அழைக்கின்றனர். அதாவது வேம்பார், வைப்பார், தூத்துக்குடி, புன்னைக்காயல், வீரபாண்டியன்பட்டணம், திருச்செந்தூர், மணப்பாடு ஆகிய ஏழு பெரிய கடற்கரை கிராமங்களுக்கு அடைக்கலத் தாய் என்று பொருள்.

தூத்துக்குடி, உலகிலுள்ள மிகப் பழைய துறைமுகங்களில் ஒன்றாகும். ஒருமுறை, கடலில் முத்தெடுக்கும் உரிமை தொடர்பாக, முத்துக்குளிக்கும் மீனவ மக்களுக்கு, அப்பகுதிவாழ் முஸ்லீம்களுடன் கடும் பிரச்சனை ஏற்பட்டது. அச்சமயம், பட்டங்கட்டிமார் எனப்படும் மீனவ இனக் கிராமங்களின் தலைவர்கள் போர்த்துக்கீசியரை அணுகி, முஸ்லீம்களின் கொடுமைகளிலிருந்து தங்களைப் பாதுகாக்குமாறு கேட்டனர். போர்த்துக்கீசியரும் முஸ்லீம்களை அடக்கி ஒடுக்கினர். இதற்கு நன்றியாக 22 கிராமங்களைச் சேர்ந்த ஏறக்குறைய 30 ஆயிரம் மீனவர்கள் 1535ம் ஆண்டுக்கும் 1537ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் கிறிஸ்தவத்தைத் தழுவினர். 1542ம் ஆண்டு அக்டோபரில் புனித பிரான்சிஸ் சவேரியார் இந்த முத்தெடுக்கும் கடற்கரைப் பகுதிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் தங்கியிருந்து, விசுவாச அறிக்கை, அருள்நிறை மரியே, இயேசு கற்றுக்கொடுத்த செபம், வானவர் கீதம் போன்ற சிலமுக்கிய செபங்களை சிரமத்துடன்  தமிழில் கற்று இம்மக்களுக்கு மறைக்கல்வி போதித்து அவர்களை விசுவாசத்தில் ஆழமாக உறுதிப்படுத்தினார்.

புனித சவேரியார் இந்தியாவிலிருந்து சீனாவுக்குச் சென்றபோது, 1552ம் ஆண்டில் பிலிப்பீன்சில் அகுஸ்தீன் சபை அருள் சகோதரிகளின் இல்லத்தில் சில நாள்கள் தங்கினார். அப்போது அவ்வில்லத்தில் இருந்த அழகிய அன்னைமரி திருவுருவம் புனித சவேரியாரை மிகவும் கவர்ந்தது. மதுரை மீனாட்சி, கன்னியாகுமரி பகவதியம்மன் ஆகிய தெய்வங்கள்மீது பற்றுகொண்டிருந்த தூத்துக்குடி மீனவ மக்களுக்கு அன்னைமரி திருவுருவத்தை நன்கொடையாக அளிக்க விரும்பினார் சவேரியார். எனவே அதைத் தருமாறு அச்சகோதரிகளிடம் கேட்டார். ஆனால் அவர்கள் மறுத்துவிட்டனர். பின்னர் சவேரியார் அதே ஆண்டில் சான்சியன் தீவில் இறந்த செய்தி கேட்டு அவர் விருப்பப்படி அத்திருவுருவத்தை அச்சகோதரிகள், புனித ஹெலன் என்ற கப்பலில் தூத்துக்குடிக்கு அனுப்பி வைத்தனர். அந்தக் கப்பல் 1555ம் ஆண்டு ஜூன் 9ம் தேதி  தூத்துக்குடி வந்து சேர்ந்தது. தற்போது தூத்துக்குடி பனிமய அன்னை திருத்தலப் பசிலிக்காவில் உள்ள அழகிய பனிமய அன்னை திருவுருவம் இதுவேயாகும்.

இத்திருத்தலத்தின் வரலாறை வாசிக்கும்போது அன்னையின் அற்புத வழிநடத்துதலை உணர முடிகின்றது. தூத்துக்குடியில் பெருமெண்ணிக்கையில் வாழ்ந்த கிறிஸ்தவ மீனவர்களின் வழிபாட்டுக்கு ஆலயம் ஒன்று தேவைப்பட்டது. இம்மக்களுக்குத் திருமுழுக்குக் கொடுத்த அருள்தந்தை Pedru Consalves 1538ம் ஆண்டு தூத்துக்குடியில் முதல் ஆலயத்தைக் கட்டி அவரின் பாதுகாவலராகிய புனித பேதுருவுக்கு அதனை அர்ப்பணித்தார். புனித பிரான்சிஸ் சவேரியாரும் இவ்வாலயத்தில் திருப்பலி நிகழ்த்தியுள்ளார். பின்னர், 1582ம் ஆண்டில், இயேசு சபையினரின் முயற்சியினால் அந்த ஆலயம் இரக்கத்தின் அன்னைக்கு அர்ப்பணிக்கப்பட்டது. கொச்சி ஆயர் தெவோரா, இவ்வாலயத்தை பனிமய அன்னை திருவிழாவான ஆகஸ்ட் 5ம் தேதி அர்ப்பணித்தார்.

முத்தெடுக்கும் கடற்கரைப் பகுதியைத் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவந்த மதுரை நாயக்கர் விரைவில் கிறிஸ்தவர்களைக் கடுமையாய் ஒடுக்கினர். ஆலயங்களுக்கும், கத்தோலிக்கரின் வீடுகளுக்கும் நெருப்பு வைத்தனர். எனவே மீனவர்கள் தூத்துக்குடியைவிட்டு அருகிலிருந்த ராஜ தீவில் குடியேறினர். இத்தீவு முயல் தீவு எனவும் அழைக்கப்படுகின்றது. அம்மக்கள் தங்களோடு பனிமய மாதா திருவுருவத்தையும் எடுத்துச் சென்று அத்தீவில் கட்டிய புதிய ஆலயத்தில் அதனை வைத்தனர். 1610ம் ஆண்டில் இயேசு சபையினர் தூத்துக்குடிக்குத் திரும்பும்வரையில் இத்திருவுருவம் அங்கேயே இருந்தது. புதுமைகள் செய்யும் பனிமய அன்னை திருவுருவம் 1610ம் ஆண்டில் தூத்துக்குடிக்கு மீண்டும் வந்தபோது அது இரக்கத்தின் அன்னை ஆலயத்தில் ஆடம்பரமாக வைக்கப்பட்டது. எனவே இவ்வாலயம் நாளடைவில் பனிமய அன்னை ஆலயம் என அழைக்கப்படலாயிற்று.

இத்திருவுருவம் குறித்து மற்றுமொரு பாரம்பரியமும் இருக்கின்றது. ராஜ தீவிலிருந்த பனிமய மாதா ஆலயம் சண்டையின்போது அழிக்கப்பட்டது. எனவே மக்கள் அங்கிருந்த பனிமய மாதா திருவுருவத்தை சிவந்தகுளம் புனித திருமுழுக்கு யோவான் சிற்றாலயத்தில் வைத்தனர். டச்சுக்காரர்கள் அவ்விடத்தை ஆக்ரமித்தபோது மீண்டும் பனிமய திருவுருவத்தை கொற்கைக்கு எடுத்துச் சென்றனர். இத்திருவுருவம் 1699ம் ஆண்டில் மீண்டும் தூத்துக்குடிக்குக் கொண்டுவரப்பட்டது என மற்றொரு பாரம்பரியம் சொல்கிறது.

மேலும், அருள்பணி விஜலியோ மான்சி, பனிமய அன்னைக்கு அழகான ஓர் ஆலயம் கட்ட வேண்டுமென்ற ஆவலில் முயற்சிகளைத் தொடங்கினார். டச்சுக்காரர்களிடமிருந்தும், இன்னும் தனது மக்களிடமிருந்தும் எதிர்ப்புக்களைச் சந்தித்தார். புதிய ஆலயம் கட்ட இலங்கையிலிருந்த டச்சு அரசிடம் அனுமதி கேட்டார். 1712ம் ஆண்டு ஏப்ரல் 4ம் தேதி புதிய ஆலயத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. 1713ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி புதிய ஆலயம் திறக்கப்பட்டது. இந்த ஆலயம் அன்னை மரியாவுக்கு அர்ப்பணிக்கப்பட்டதன்(1582) 400ம் ஆண்டு 1982ம் ஆண்டில் சிறப்பிக்கப்பட்டபோது இவ்வாலயத்தைப் பேராலயமாக (பசிலிக்கா) உயர்த்தினார் புனித திருத்தந்தை 2ம் ஜான் பால்.

இந்த அழகிய பனிமய மாதா திருவுருவம், தூத்துக்குடியில் இயேசு சபையினர் கட்டிய புனித பவுல் ஆலயத்தில் வைக்கப்பட்டது முதற்கொண்டு இத்தாயை எப்போதும் புதுமைகள் செய்பவராகவே மக்கள் நோக்கினர். தூத்துக்குடியில் தற்போதிருக்கும் தூய பனிமய அன்னை திருத்தலத்தைக் கட்டிய விஜிலியோ மான்சி எனும் இயேசுசபை அருள்பணியாளரே முதல் புதுமையை விவரித்துள்ளார். இவர் உரோமையிலிருந்த மரிய இஞ்ஞாசி என்ற அருள்பணியாளருக்கு 1708ம் ஆண்டு செப்டம்பர் 24ம் தேதி எழுதிய கடிதத்தில் இப்புதுமையை விவரித்திருக்கிறார். 1707ம் ஆண்டு ஏப்ரல் 4ம் தேதி நள்ளிரவில் பெரிய மின்னல் மின்னி இடி இடித்து அது தனது இல்லத்தில் விழுந்ததாகவும், அச்சமயத்தில் அத்திருவுருவம் தனது இல்லத்தில் இருந்தது எனவும், தான் அற்புதமாக காப்பாற்றப்பட்டது குறித்தும் எழுதியுள்ளார்.

அருள்பணி பிரான்சிஸ் வாய்ஸ் என்பவர் 1709ம் ஆண்டில் மற்றுமொரு புதுமை பற்றி எழுதியுள்ளார். புதிதாக மனம்மாறிய டச்சு நாட்டு அதிகாரி ஒருவர் கடும் நோயால் தாக்கப்பட்டார். எந்த மருத்துவரும் எந்த மருந்தும் அவருக்கு உதவவில்லை. நாளுக்கு நாள் நிலைமை மோசமாகியது. அவர் தனது படுக்கைக்கு அருகில் பனிமய அன்னை திருவுருவத்தைக் கழுவிய தண்ணீரை வைத்திருந்தார். மரணப்படுக்கையில் இருந்த அவர் அந்த நீரைக் குடித்தார். அவரும் அற்புதமாய்க் குணமடைந்தார். பின்னர் அவர் முழுமையாக கத்தோலிக்க விசுவாசத்தைத் தழுவினார்.

ஒரு சமயம், முழுவதும் பக்கவாத்தால் பாதிக்கப்பட்ட இருவர், குணமாவோம் என்ற நம்பிக்கையை இழந்திருந்தனர். ஆயினும் அவர்கள் தங்களது வாழ்நாள் முழுவதும் தினமும் செபமாலை செபித்து பனிமய அன்னை திருவுருவத்தைக் கழுவிய நீரை விசுவாசத்துடன் குடிப்பதாக, இப்புதுமை மாதா திருவுருவத்துக்கு முன்பாக உறுதி எடுத்தனர். அந்நோய் கொஞ்சம் கொஞ்சமாக நீங்கி அவர்கள் இருவரும் முழுவதும் குணமடைந்தனர்.

மேலும், குழந்தை பேறற்ற ஒரு பெண் பனிமய அன்னை திருவுருவத்துக்கு அருகில் வைக்கப்பட்டிருக்கும் எண்ணெய்யை விசுவாசத்தோடு குடித்தார். அவர் ஒரு குழந்தைக்குத் தாயானார்.

ஒருமுறை மாதா பக்தியுள்ள ஒரு பெண், நவநாள் செபத்தில் கலந்து கொள்வதற்காக ஆலயம் வந்துவிட்டார். அந்நேரத்திலே ஒரு சிறு துண்டுத்துணி எண்ணெய் விளக்கில் விழுந்தது. குடிசையில் தீ பிடித்தது. முழுக் குடிசையும் பற்றி எரிந்திருக்க வேண்டும். ஆனால் அந்தச் சிறு துண்டுத்துணி மட்டுமே எரிந்திருந்தது.

தூத்துக்குடியில் அழகுமிக்க பனிமய அன்னையைத் தங்கத்தேரில் வைத்து வீதியெங்கும் பவனி வரும் வழக்கம் 1806ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி முதன்முதலில் துவங்கியது. இதுவரை 16 முறை தங்கத்தேர் பவனிகள் தூத்துக்குடியில் இடம்பெற்றுள்ளன. முக்கிய நிகழ்வுகளை குறிக்கும் ஆண்டுகளில் மட்டும் ஆகஸ்ட் 5-ம் தேதி தங்கத் தேர் பவனி நடைபெறும். தூத்துக்குடி கத்தோலிக்க மறைமாவட்டத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 2023ஆம் ஆண்டு 16-வது தங்கத் தேர் பவனி நடைபெற்றது.

நேவிஸ் பொன்சேக்கா எனும் கத்தோலிக்கக் கலைஞர், திருவெளிப்பாடு நூல் 12ம் பிரிவில் கூறப்பட்டுள்ளது போலவே இத்தேரை நுணுக்க வேலைப்பாடுகளுடன் வடிவமைத்தார். இத்தேரின் உச்சியில் சிலுவைக்குப் பதிலாக விண்மீன் உள்ளது. அன்னைமரியா, ஸ்டெல்லா மாரிஸ் அதாவது கடலின் விண்மீன் என்பதைக் குறிப்பதாக அது உள்ளது. கடலின் விண்மீன் என்பதற்கு எபிரேயத்தில் Mirjam என்பதாகும். அன்னைமரியாவுக்கு இந்தப் பெயர் வானதூதரால் அன்னைமரியின் பெற்றோர் வழி அருளப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. துன்பமெனும் அலைகடலால் துன்புறும் நமக்கெல்லாம் அன்னைமரி வழிகாட்டும் விண்மீனாக இருக்கிறார். அன்னைமரியின் இறைத்தாய்மை, அவரின் அமல உற்பவம், அவரின் நித்திய கன்னிமை, அவர் இறையருளின் வாய்க்காலாக இருப்பது, அவர் விண்ணக வாயில்  ஆகிய ஐந்து பண்புகளைக் குறிப்பதாய் இந்தத் தேரின் உச்சியிலுள்ள விண்மீன் ஐந்து முனைகளைக் கொண்டுள்ளது.

கோட்டாறு மறைமாவட்ட மேனாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் அவர்கள் கூறியது போல, நாம் எதைக் கேட்டாலும் நமக்குக் கிடைக்கச் செய்வார் நம் மரியன்னை என்ற முழு நம்பிக்கையுடன் நாம் பனிமய அன்னையை நாடுவோம்.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 November 2024, 12:19