பாகிஸ்தான் கிறிஸ்தவரின் விசுவாசம் பலப்படுத்தப்பட்டு வருகின்றது
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
பாகிஸ்தான் நாட்டில் துன்புறுத்தல்களை அனுபவித்துவரும் பாகிஸ்தான் கிறிஸ்தவர்களின் விசுவாசம் பலப்படுத்தப்பட்டு வருகின்றபோதிலும், அந்நாட்டின் சட்டங்களால் அப்பாவி மக்களின் உயிர்கள் பறிக்கப்படுவதாக ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளார் அந்நாட்டு ஆயர் Samson Shukardin.
பல்வேறு சவால்களை எதிர்நோக்கிவரும் பாகிஸ்தான் கிறிஸ்தவர்கள், அதனாலேயே தங்கள் விசுவாசத்தில் உறுதிப்படுத்தப்பட்டவர்களாக இருப்பதாகத் தெரிவிக்கும் பாகிஸ்தானின் ஹைதராபாத் ஆயர் ஷுக்கார்தின் அவர்கள், கிறிஸ்துவுக்காக தங்கள் உயிரையும் வழங்க பாகிஸ்தானில் கிரிஸ்தவர்கள் தயாராக இருக்கும் நிலை, அங்கு தேவ அழைத்தல்கள் அதிகரிக்கவும் காராணமாக இருக்கிறது என மேலும் தெரிவித்தார்.
தனக்கு வந்த அவதூறான வாட்ஸ்ஆப் செய்தி ஒன்றை இன்னொருவருக்கு அனுப்பியதாக தேவநிந்தனைச் சட்டத்தின் கீழ் அண்மையில் கைதுச் செய்யப்பட்டுள்ள 40 வயது கிறிஸ்தவப் பெண் Shagufta Kiran என்பவர் சிறைவைக்கப்பட்டுள்ளது குறித்து கண்டனத்தை வெளியிட்ட ஆயர், அவரின் விடுதலைக்காக உச்ச நீதிமன்றத்தில் விண்ணப்பித்துள்ளதாகத் தெரிவித்தார்.
பாகிஸ்தானில் மத தீவிரவாத குழுக்கள் அதிக பலம் பெற்றவர்களாகச் செயல்படுவதாலும், அவர்களுக்கு சாதகமாகவே அரசும் சட்டங்களை இயற்றிவரும் நிலையில் அந்நாட்டில் கலந்துரையாடல்களுக்கோ, சீர்திருத்தத்திற்கோ இடமில்லா நிலை உள்ளது என மேலும் கூறினார் ஆயர் ஷுக்கார்தின்.
சிலரின் பொறாமையால் எழும் பொய்யான குற்றச்சாட்டுக்களால் அப்பாவி மக்கள் கொடுமைக்கு உள்ளாக்கப்படுவது இடம்பெறுகிறது என்ற ஆயர், கலந்துரையாடல்களும் சீர்திருத்தங்களும் அதிகம் தேவைப்படுகின்றன என மேலும் கூறினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்