ҽ

நெருப்பின் வழியாக பதிலளித்த கடவுள் நெருப்பின் வழியாக பதிலளித்த கடவுள் 

தடம் தந்த தகைமை - எலியாவின் குரலுக்கு செவிமடுத்த கடவுள்

ஆண்டவரின் நெருப்பு கீழே இறங்கி அந்த எரிபலியையும், விறகுக் கட்டைகளையும், கற்களையும், மணலையும் சுட்டெரித்து வாய்க்கால் நீரையும் வற்றச் செய்தது.

மெரினா ராஜ் - வத்திக்கான் 

எலியா எல்லா மக்களையும் நோக்கி, “என் அருகில் வாருங்கள்” என்றார். மக்கள் அனைவரும் அவர் அருகில் வந்தனர். உடனே எலியா அங்கே இடிந்து கிடந்த ஆண்டவரது பலிபீடத்தைச் செப்பனிட்டார். ‘உன் பெயர் இஸ்ரயேல்’ என்று ஆண்டவர் யாக்கோபுக்கு உரைத்திருந்ததன் பொருட்டு, அவர் வழிவந்த குலங்களின் எண்ணிக்கைப்படி எலியா பன்னிரு கற்களை எடுத்தார். அக்கற்களைக் கொண்டு ஆண்டவர் பெயரில் ஒரு பலிபீடத்தைக் கட்டி, அப்பலி பீடத்தைச் சுற்றிலும் இரண்டு உழவுகால் அகலம் உள்ள வாய்க்காலை வெட்டினார். அதன்பின் விறகுக் கட்டைகளை அடுக்கி, காளையைத் துண்டு துண்டாக வெட்டி, அவற்றின் மேல் வைத்தார். “நான்கு குடங்கள் நிறைய தண்ணீர் கொண்டு வந்து, எரிபலியின் மேலும் விறகுக் கட்டைகளின்மேலும் ஊற்றுங்கள்” என்றார். அவர் “இரண்டாம் முறையும் செய்யுங்கள்”, என்றார். அவர்கள் இரண்டாம் முறையும் அவ்வாறே செய்தனர். அவர் “மூன்றாம் முறையும் செய்யுங்கள்” என்றார்.

அவர்கள் மூன்றாம் முறையும் அப்படியே செய்தனர். எனவே, தண்ணீர் பலிபீடத்தைச் சுற்றிலும் ஓடியது. மேலும், வாய்க்காலை அவர் தண்ணீரால் நிரப்பினார். மாலைப் பலி செலுத்தும் நேரமாயிற்று. இறைவாக்கினர் எலியா பலிபீடத்தின் அருகில் வந்து, “ஆபிரகாம், ஈசாக்கு இஸ்ரயேல் என்பவர்களின் கடவுளாகிய ஆண்டவரே! இஸ்ரயேலின் கடவுள் நீரே என்றும், இவற்றையெல்லாம் நான் உம் வாக்கின்படியே செய்தேன் என்றும் இன்று விளங்கச் செய்தருளும். நீரே கடவுளாகிய ஆண்டவர் என்றும் நீரே இம்மக்களின் மனத்தை மீண்டும் மாற்றுவீர் என்றும் இம்மக்கள் அறியும்படி எனக்குப் பதில் தாரும்! ஆண்டவரே எனக்குப் பதில் தாரும்!” என்றார். உடனே ஆண்டவரின் நெருப்பு கீழே இறங்கி அந்த எரிபலியையும், விறகுக் கட்டைகளையும், கற்களையும், மணலையும் சுட்டெரித்து வாய்க்கால் நீரையும் வற்றச் செய்தது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 December 2023, 10:57